அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்! டாக்டர் வெங்கடேஷ் கட்சியில் மீண்டும் சேர்ப்பு

அதிமுகவில் இருந்து கடந்த 2011 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ் ஆகியோர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்! டாக்டர் வெங்கடேஷ் கட்சியில் மீண்டும் சேர்ப்பு

அதிமுகவில் இருந்து கடந்த 2011 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ் ஆகியோர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதில், தினகரனுக்கு அதிமுக துணை பொதுச் செயலாளர் என்ற மிகப்பெரிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. டி.டி.வி. தினகரன் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவின் சகோதரி மகன், என். வெங்கடேஷ் சசிகலாவின் சகோதரர் மகன் ஆவர்.
இதுகுறித்து, அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டி.டி.வி.தினகரன், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை முன்னாள் செயலாளர் டாக்டர் எஸ்.வெங்கடேஷ் ஆகியோர் தங்களது செயலுக்கு வருந்தி நேரிலும், கடிதம் மூலமும் மன்னிப்பு கோரி தங்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள கேட்டுக் கொண்டனர்.
எனவே, அவர்கள் செவ்வாய்க்கிழமை (பிப். 14) முதல் கட்சியின் உறுப்பினர்களாக இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர் என்று தனது அறிவிப்பில் சசிகலா தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் அக்காள் மகன்: கடந்த செவ்வாய்க்கிழமையன்று அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு, அதிமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கட்சியினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிறந்த ஊரான திருத்துறைப்பூண்டியையும் தந்தை பெயரான விவேகானந்தன் பெயரையும் இணைத்து சுருக்கமாக அவரது பெயர் டி.டி.வி.தினகரன் என்று ஆனது.
எம்.ஜி.ஆர்., காலத்தில் ஜெயலலிதாவுக்குத் துணையாக சசிகலா தனது பணியைத் தொடங்கினார். அப்போது, சிறுவயதுப் பையனாக போயஸ் தோட்டத்தில் நுழைந்தார் டி.டி.வி.தினகரன்.
அதன்பின், 1999 ஆம் ஆண்டு தீவிர அரசியலுக்குள் நுழைந்தார் அவர். பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அவர், அமோக வெற்றி பெற்றார்.
தோட்டத்தில் இருந்து வெளியேறினார்: மக்களவை உறுப்பினராக இருந்த அவர், அதிமுகவில் முக்கிய இடத்தைப் பெறுவார் என்று எதிர்பார்ப்பு மேலோங்கிய நிலையில், லண்டனில் ஹோட்டல் வாங்கிய வழக்கு தினகரனின் அரசியல் வாழ்வில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
ஹோட்டல் வழக்கில் இருந்து தினகரன் விடுவிக்கப்பட்ட சூழலில், அது போயஸ் தோட்டத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. இதையடுத்து, அவர் தோட்டத்தில் இருந்து வெளியேறினார். ஆனால், அதிமுகவிலும், அரசியல் வட்டாரத்திலும் அவருக்கென தனி வட்டம் உருவாகியே இருந்தது.
2011-இல் நீக்கம்: கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பரில் சசிகலா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அதிமுகவில் இருந்து நீக்கி, மறைந்த ஜெயலலிதா உத்தரவிட்டார். அதில், தினகரனும் அடங்குவார்.
அப்போது முதல் அவர் கட்சியில் இணைத்துக் கொள்ளப்படவே இல்லை. இந்தச் சூழ்நிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆட்சி அமைக்க உரிமை கோரி, கடந்த 9 ஆம் தேதியன்று ஆளுநரிடம் சசிகலா கடிதம் அளித்தார்.
அப்போது, சசிகலாவுக்கு அடுத்தபடியாக டி.டி.வி.தினகரன் அமர்ந்திருந்தார். இதேபோன்று, எடப்பாடி கே.பழனிசாமியும் ஆட்சி அமைக்க உரிமை கோரிய போது தினகரனே உடன் சென்றிருந்தார்.
இப்படி அதிமுகவில் முக்கியத்துவம் பெற்ற அவர் கடந்த செவ்வாய்க்கிழமை அதிமுகவில் மீண்டும் இணைக்கப்பட்டு, கட்சியின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அன்னியச் செலாவணி வழக்கு: தினகரன் மீது அன்னியச் செலாவணி வழக்கு நிலுவையில் உள்ளது. அதாவது, அவரது வங்கி கணக்குகளில் 1995, 1996 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை முதலீடு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது 1996 ஆம் ஆண்டு அன்னியச் செலாவணி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கில் அவருக்கு ரூ.28 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஓ.பி.எஸ்.ஸை அடையாளம் காட்டியவர்....
பெரியகுளத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக தலைமைக்கு அடையாளம் காட்டியவர், டி.டி.வி.தினகரன்.
இதுகுறித்த தகவல்:
கடந்த 1999 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வந்தது. அப்போது, டி.டி.வி. தினகரன் அதிமுக சார்பில் பெரியகுளத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் டி.டி.வி.தினகரன் பெரியகுளத்தில் முகாமிட்டார். கட்சியினர் தினகரனுக்கு வணக்கம் செலுத்தினர். அப்போது, பன்னீர்செல்வம் தினகரனின் காலில் விழுந்து வணங்கினார். தினமும் தினகரன் முன் ஆஜரானார். பன்னீர்செல்வம் அவரது தம்பி ராஜாவின் வீட்டை தேர்தல் அலுவலகமாக மாற்றி, தினகரனை அங்கு வரவழைத்தார். அங்கேயே தினகரன் தங்கினார்.
அப்போது பன்னீர்செல்வத்துக்கு, தேர்தல் வரவு-செலவுகளை கவனித்துக் கொள்ளும் பணி வழங்கப்பட்டது. இதைமட்டுமல்லாது, தினகரனைக் கவரும் வகையில் பல்வேறு தேர்தல் பணிகளை அவர் மேற்கொண்டார். இதையடுத்து, பெரியகுளம் மக்களவைத் தேர்தலில் தினகரன் அமோக வெற்றி பெற்றார்.
வெற்றிக்கு கைமாறாக பன்னீர்செல்வத்துக்கு மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கிக்கொடுத்தார் தினகரன். டான்சி வழக்கில் முதல்வர் ஜெயலலிதா சிறை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்ட போது, முதல் முறையாக முதல்வரானார் பன்னீர்செல்வம். அந்த வாய்ப்பும் தினகரன் மூலமே அவருக்குக் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com