கட்சியைக் காப்பாற்ற அதிமுக ஒன்றுபட வேண்டும்: அமைப்புச் செயலர் பதவியை ராஜிநாமா செய்த பிறகு கருப்பசாமி பாண்டியன் பேட்டி

தமிழகத்தில் இப்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் அதிமுக ஒன்றுபட வேண்டும் என, அக்கட்சியின் மாநில அமைப்புச் செயலர் பதவியை ராஜிநாமா செய்த வீ. கருப்பசாமி பாண்டியன் கூறினார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார் வீ. கருப்பசாமி பாண்டியன்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார் வீ. கருப்பசாமி பாண்டியன்.

தமிழகத்தில் இப்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் அதிமுக ஒன்றுபட வேண்டும் என, அக்கட்சியின் மாநில அமைப்புச் செயலர் பதவியை ராஜிநாமா செய்த வீ. கருப்பசாமி பாண்டியன் கூறினார்.
இதுதொடர்பாக அவர் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
தன்மானம் காக்க வேண்டும் என்பதற்காக 1972இல் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக. தொடர்ந்து 3 முறை ஆட்சி அமைத்த அவருக்குப் பிறகு, கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தி வந்தவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு பிறகும் அதிமுகவைக் காக்க வேண்டும் என்ற சூழலில் கோடிக்கணக்கான தொண்டர்கள் மனக்குழப்பத்துக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால், உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, சிறைக்கு செல்ல சில மணிநேரமே உள்ள நிலையிலும் சசிகலா குடும்பம், அதிமுகவையும், அதன் சொத்துகளையும் அபகரிக்க முயன்று வருகிறது.
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது சசிகலா உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். சசிகலா மட்டும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து அடிப்படை உறுப்பினராக மட்டும் இணைந்தார். ஆனால், ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அவரது மரணம் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மர்மமாகவே உள்ளன.
அதிமுக பொதுச் செயலர் பதவி நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விசாரணை இருக்கும் சூழலில், ஒரே நாளில் கட்சியில் சேர்க்கப்பட்டு உயர்ந்த பதவியான துணைப் பொதுச் செயலர் பதவி டி.டி.வி. தினகரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட, ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, கட்சிக்கு அவமானம் ஏற்படுத்தியோருக்கு இப்போது பதவி அளிக்கப்பட்டுள்ளது.
இதைத் தன்மானம் உள்ள எந்த தொண்டனும் ஏற்கமாட்டான். எனவே, மனசாட்சிக்கு விரோதமாக செயல்பட முடியாது என்ற காரணத்தால் மாநில அமைப்புச் செயலர் பதவியை ராஜிநாமா செய்கிறேன். இப்போது அதிமுக அடிப்படை உறுப்பினராக மட்டுமே தொடருகிறேன். இப்போதுள்ள சூழலில் அதிமுகவை பிளவுபடுத்தக் கூடாது. கட்சி ஒன்றுபட வேண்டும்.
ஓபிஸ் அணியிலிருந்து இதுவரை யாரும் என்னை அழைக்கவில்லை. தொடர்பு கொள்ளவும் இல்லை. திமுகவில் எனக்கு பதவி இருக்கக் கூடாது என அழகிரி பழிதீர்த்தார். அடிப்படை உறுப்பினராகக்கூட இருக்கக் கூடாது என கனிமொழி முயன்றார். எனவே, ஓராண்டு அமைதி காத்து திமுகவிலிருந்து விலகி, பிறந்த இடமான அதிமுகவுக்கு வந்துவிட்டேன். எனது, அடுத்த முடிவு என்பது இதுவரை என்னுடன் தொடர்ந்து பணியாற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத் தொண்டர்களின் கருத்தைக் கேட்டு அறிவிப்பேன்.
இப்போதைய சூழலில் அதிமுகவைக் காப்பாற்றும் முதல் தகுதி ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டுமே உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com