கூவத்தூர் நட்சத்திர விடுதியில் ஐ.ஜி., எஸ்.பி. திடீர் சோதனை: எம்.எல்.ஏ.க்களிடம் தீவிர விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள கூவத்தூர் நட்சத்திர விடுதியில் வடக்கு மண்டல ஐ.ஜி.,யும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் புதன்கிழமை திடீர் சோதனை செய்தனர்
கூவத்தூர் நட்சத்திர விடுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்.
கூவத்தூர் நட்சத்திர விடுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள கூவத்தூர் நட்சத்திர விடுதியில் வடக்கு மண்டல ஐ.ஜி.,யும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் புதன்கிழமை திடீர் சோதனை செய்தனர்
அதிமுக கட்சியினரிடையே பிளவு ஏற்பட்ட பின்னர், அந்தக் கட்சியின் பொதுச் செயலர் வி.கே.சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், கூவாத்தூரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த 8 -ஆம் தேதி முதல் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக அந்த விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்குத் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. முத்தரசியும், வருவாய்த் துறை அதிகாரிகளும் அங்கு தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை செய்து, அவர்கள் அளித்த வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதற்கிடையே அங்கிருந்து தப்பி வந்த எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அந்த விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக டி.ஜி.பி.யிடம் புகார் அளித்தார்.
திடீர் சோதனை: இந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வடக்கு மண்டல ஐ.ஜி. என்.கே.செந்தாமரைக்கண்ணன், காஞ்சிபுரம் எஸ்.பி.முத்தரசி ஆகியோருக்கு டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
70 பேர் வெளியேற்றம்: இதையடுத்து செந்தாமரைக்கண்ணன், முத்தரசி ஆகியோர் போலீஸாருடன் புதன்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் அந்த விடுதிக்குள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு எம்.எல்.ஏ.க்களுடன் தங்கியிருந்த 70 நபர்களை கண்டறிந்து, அவர்களை போலீஸார் வெளியேற்றினர்.
விசாரணை: இதனிடையே காவல் துறை அதிகாரிகள், ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். எம்.எல்.ஏ.க்கள் அங்கு சுயவிருப்பத்துடனும், முழுமனதுடனும் தங்கியுள்ளனரா அல்லது மிரட்டி தங்க வைக்கப்பட்டுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை செய்தனர். சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த விசாரணை நிகழ்வுகள் முழுவதையும் அதிகாரிகள் விடியோ பதிவு செய்தனர்.
இந்த சோதனையையொட்டி, அந்த விடுதி பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. காவல் துறையின் இந்த திடீர் நடவடிக்கையால், விடுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது.
மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்த வண்ணம் இருந்தனர். அப்போது அவர்கள், தாங்கள் சுயவிருப்பத்தின் பேரிலேயே விடுதியில் தங்கியிருப்பதாக கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com