தமிழகத்தின் அடுத்த முதல்வராகும் எடப்பாடி பழனிசாமியின் பின்னணி

தமிழக பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள், சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சராகப் பதவி வகித்து வருபவர் எடப்பாடி கே.பழனிசாமி.
தமிழகத்தின் அடுத்த முதல்வராகும் எடப்பாடி பழனிசாமியின் பின்னணி

தமிழக பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள், சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சராகப் பதவி வகித்து வருபவர் எடப்பாடி கே.பழனிசாமி.

அதிமுக பொதுச் செயலர் சசிகலாவுக்கு, சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 14ம் தேதி எடப்பாடி பழனிசாமி அளித்த அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழக முதல்வராக ஆட்சியமைக்கும்படி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் பழனிசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை ஏற்று, பழனிசாமி இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகையில் தமிழக முதல்வராக பதவியேற்பார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் தலைமை நிலையச் செயலராக உள்ள இவர், பன்னீர்செல்வம் பிரிந்து தனி அணியானதைத் தொடர்ந்து  அதிமுகவின் சட்டப்பேரவைக் குழு தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளார்.

இவரது சுயவிவரக் குறிப்பு: சேலத்தை அடுத்த எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில் 1954-இல் பிறந்த இவர், பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கருப்பக்கவுண்டர், தாய் தௌசயம்மாள். பி.எஸ்சி. வரை படித்துள்ள இவரது மனைவி ராதா. இவருக்கு மிதுன்குமார் என்ற மகன் உள்ளார்.

அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு கடந்த 1989-ஆம் ஆண்டு அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என 2-ஆக பிரிந்தது. அப்போது, ஜெயலலிதா அணியில் இணைந்து சேவல் சின்னத்தில் எடப்பாடியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

அதைத் தொடர்ந்து 1991-இல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்றார். 1996 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு இருமுறை தோல்வியடைந்தார். பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டார். இதில் 1998-இல் வெற்றியும், 1999 மற்றும் 2004-ஆம் ஆண்டுகளில் தோல்வியும் அடைந்தார். 2004-இல் சிமெண்ட் வாரியத் தலைவராகவும், 1992 முதல் 1996 வரை ஆவின் தலைவராகவும் இருந்தார்.

2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் வெற்றிபெற்று, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். தொடர்ந்து, 2016-இல் எடப்பாடி தொகுதியில் மீண்டும் வெற்றிபெற்று பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றம் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

மேலும், கடந்த 2011 முதல் சேலம் புறநகர் மாவட்டச் செயலராக பதவி வகித்து வருகிறார். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார். அண்மையில் கட்சியின் தலைமை நிலையச் செயலாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

கட்சி பொறுப்பு: 1972-இல் சிலுவம்பாளையம் பகுதி அதிமுக கிளைச் செயலராக அரசியலைத் தொடங்கினார். 1983-இல் ஒன்றிய இணைச் செயலர் என அடுத்தடுத்து பதவிகளைப் பெற்றார்.

கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவர், மாவட்டச் செயலர், அதிமுக கொள்கை பரப்புச் செயலர், அகில இந்திய எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலர், அதிமுக அமைப்புச் செயலர் என கட்சியில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.
 
இன்று, இவர் சசிகலாவின் ஆதரவினால் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com