மதுரை மருத்துவக் கல்லூரி விடுதி மாடியிலிருந்து குதித்து எம்பிபிஎஸ் மாணவர் தற்கொலை

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி விடுதியின் மாடியிலிருந்து குதித்து எம்பிபிஎஸ் மாணவர் ம. முகம்மது ஷா (20), புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மருத்துவக் கல்லூரி விடுதி மாடியிலிருந்து குதித்து எம்பிபிஎஸ் மாணவர் தற்கொலை

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி விடுதியின் மாடியிலிருந்து குதித்து எம்பிபிஎஸ் மாணவர் ம. முகம்மது ஷா (20), புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த மஜீத் மகன் முகமது ஷா. இவர் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியின் மூன்றாவது மாடியில் தங்கியிருந்த இவர், செவ்வாய்க்கிழமை இரவு தனது அறைக்கு வெளியே செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், புதன்கிழமை காலை பார்த்தபோது விடுதிக்கு கீழே ரத்தக் காயங்களுடன் முகமது ஷா விழுந்து இறந்து கிடந்தார்.
தகவலின் பேரில், மாநகரக் காவல் சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் பி. அருண் சக்திகுமார் மற்றும் போலீஸார் கல்லூரி விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், முகமது ஷா மூன்றாவது தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.
""அவர் செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது தவறி விழுந்ததாக, சிலர் தெரிவித்தனர். ஆனால், செல்லிடப்பேசி சட்டை பையில் இருந்தது. மேலும், அவர் விழுந்து கிடந்த இடத்தை பார்க்கும்போது தவறி விழுந்திருக்க வாய்ப்பில்லை.
அவரது செல்லிடப்பேசியில் பதிவான எண்களை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் ஒரு பெண்ணின் எண்ணுக்கு பேசியுள்ளார். அதன் பிறகே, மாடியில் இருந்து குதித்துள்ளார். இதில் அவரது தொடை எலும்பு, தண்டு வடம், கழுத்து எலும்பு ஆகியன முறிந்துள்ளன. காதல் விவகாரத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்'' என போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து விடுதியில் உள்ளவர்கள் கூறுகையில், ""கொல்லத்தில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த முகமது ஷா, கடந்த 10 நாள்களாகவே மனமுடைந்த நிலையில் இருந்தார்.
விடுதியில் கூட யாரிடமும் பேசாமல், அமைதியாக இருந்து வந்தார். செவ்வாய்க்கிழமை இரவில் செல்லிடப்பேசியில் காரசாரமாக பேசிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவில் பார்த்தபோது, அவர் அங்கு இல்லை. அறைக்கு தூங்கச் சென்று விட்டார் என்று நினைத்து விட்டோம்.
ஆனால் காலையில் அவர் இறந்து கிடந்ததை பார்த்த பின்புதான், அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது'' என்று தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக, தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பிரேதப் பரிசோதனைக்கு பின்பு, முகமது ஷாவின் சடலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com