சிறுமி ஹாசினி வழக்கு: குற்றவாளிக்கு 2 நாள் போலீஸ் காவல்

சென்னையில் சிறுமி ஹாசினியை பலாத்காரத்துக்கு உட்படுத்தி, கொலை செய்த குற்றவாளியை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சிறுமி ஹாசினி வழக்கு: குற்றவாளிக்கு 2 நாள் போலீஸ் காவல்


சென்னை: சென்னையில் சிறுமி ஹாசினியை பலாத்காரத்துக்கு உட்படுத்தி, கொலை செய்த குற்றவாளியை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை போரூர் அருகே மதனந்தபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பாபு-ஸ்ரீதேவி தம்பதியரின் மகள் ஹாசினி. இவர் கடந்த வாரம் அதே குடியிருப்பில் வசித்து வந்த ஐ.டி. ஊழியரால் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மென்பொருள் பொறியாளர் தஷ்வந்த்தை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் சிறுமி ஹாசினி வழக்கில், குற்றவாளி தஷ்வந்த்தை  2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதில் அரசு தரப்பு வழக்குரைஞர் ஜெயமாலினி ஆஜரானார்.

முன்னதாக, குற்றவாளி தஷ்வந்து தரப்பில் எந்த வழக்குரைஞரும் வாதாடக் கூடாது என்று வழக்குரைஞர்கள் தரப்பில் தீர்மானிக்கப்பட்டது.

பிப்ரவரி 5ம் தேதி மாலை வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஹாசினி மாயமானார். அவளை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். இது குறித்து மாங்காடு காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.

உடனடியாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து, அதே குடியிருப்பில் வசித்து வந்த இளைஞர் தஷ்வந்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அதில், ஹாசினியை அவர் வீட்டுக்குக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததையும், அப்போது அவர் கூச்சலிட்டதால் போர்வையால் அழுத்தி கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டார்.

மேலும் ஹாசினியின் உடலை பையில் வைத்து எடுத்துச் சென்று அனகாபுத்தூர் பாலத்தையொட்டி இருக்கும் பகுதியில் பையுடன் சேர்த்து ஹாசினியின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாகவும் கூறினார்.

இதையடுத்து, சிறுமி உடல் எரிக்கப்பட்ட இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், சிறுமி உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற தஷ்வந்தை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில், ஹாசினியின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com