புதிய ஆட்சியை அகற்றுவோம்: ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் சபதம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை நீக்கிவிட்டு, ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைக்க சபதம் எடுத்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
புதிய ஆட்சியை அகற்றுவோம்: ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் சபதம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை நீக்கிவிட்டு, ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைக்க சபதம் எடுத்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வியாழக்கிழமை இரவு 7.45 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் இ.மதுசூதனன், கே.பி.முனுசாமி, முன்னாள் பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியது: 2011-ஆம் ஆண்டில் சசிகலா குடும்பத்தினரை ஜெயலலிதா தனது வீட்டில் இருந்து வெளியேற்றினார். 3 மாதத்துக்குப் பின்னால் சசிகலாவை மட்டும்தான் உதவியாக இருப்பதற்கு ஜெயலலிதா அனுமதித்தார். "சசிகலா குடும்பத்தினர் யாரையும் உயிரோடு இருக்கும்வரை வீட்டில் அனுமதிக்க மாட்டேன்' என்று கூறி அவரது குடும்பத்தினரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கிவிட்டார். ஜெயலலிதா இறக்கும் வரை சசிகலா குடும்பத்தினர் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் வியாழக்கிழமை பதவியேற்றிருக்கும் ஆட்சி ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசத்துடன் கூடிய ஆட்சியாக இல்லை. சசிகலா குடும்பத்தினுடைய ஆட்சிதான் பதவியேற்றுள்ளது. இந்த ஆட்சியை நீக்கி, மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை நிறுவுவோம். இந்தச் சபதத்தைக் கூடிய விரைவில் நிறைவேற்றுவோம்.
வாக்காளர் பேரணி: அதிமுக எம்எல்ஏக்கள் நியாயமான முடிவுகளை எடுக்க வலியுறுத்தும் வகையில், அவர்கள் சார்ந்திருக்கும் தொகுதிகளில் பேரணி, ஊர்வலம் நடைபெறும். ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் அவர் வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு கட்சி நடத்தும் துர்பாக்கிய சூழலை அகற்ற வேண்டும். தமிழகத்தில் ஏழரை கோடி மக்களும், அதிமுக தொண்டர்களும் விரும்பாத, விரோத ஆட்சி தூக்கி எறியப்படும். அதுவரை ஓயமாட்டோம். கடந்த 10 நாள்களாக எந்த செயல்பாடுகளும் முறையாக நடைபெறவில்லை. ஒரு சதவீத மக்கள்கூட விரும்பாத மக்கள் விரோத ஆட்சியை அகற்ற மக்கள் சபதம் ஏற்றுள்ளனர் என்றார் அவர்.
தர்ம யுத்தம் தொடரும் - ஓ.பன்னீர்செல்வம்: முன்னதாக, தனது இல்லத்தில் ஓ. பன்னீர்செல்வம் தொண்டர்களிடையே பேசியதாவது: ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைக்கும் வரை தர்ம யுத்தம் தொடரும். ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சியும் ஆட்சியும் போவதை தடுத்து நிறுத்துவோம். மக்களாட்சியை மீண்டும் அமைப்போம். அதுவரை தர்ம யுத்தம் தொடரும் என்றார்.
பின்னர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: அதிமுக தனி ஒரு குடும்பத்தின் சொத்தாக மாறிவிடக் கூடாது என்பதற்காக தொடங்கப்பட்ட அறப்போருக்கு மக்கள் அமோக ஆதரவை அளித்து ஊக்கம் தந்தார்கள்.
ஜெயலலிதாவின் மரணத்துக்குக் காரணமானவர்களின் கரங்களில் அரசா என்று மக்கள் மனம் துடிக்கின்றனர். இதற்காகத்தான் தர்ம யுத்தம் தொடங்கினோம். ஜெயலலிதாவின் மக்கள் நல அரசை நிலை நாட்டுவதற்காகவும் மேற்கொண்டுள்ள இந்த அறப்போர் தொடரும். இந்த அறப்போரில் வென்று காட்டுவோம். இது ஜெயலலிதாவின் மேல் ஆணை என்றார்.
நீதி கேட்டுப் பயணம்: இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நீதி கேட்டுப் பயணம் செல்ல உள்ளதாக முன்னாள் அமைச்சர் செம்மலை கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆட்சி விரைவில் நிச்சயம் மலரும். எம்ஜிஆர் நீதி கேட்டு தமிழகம் பயணம் செய்தார். அதன் இரண்டாம் பயணமாக நீதி கேட்டு தமிழகம் முழுவதும் பன்னீர்செல்வம் செல்ல உள்ளார். அந்தப் பயணம் வெற்றிபெறும் என்றார் செம்மலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com