முதல்வரானார் எடப்பாடி பழனிசாமி: 30 அமைச்சர்களும் பதவியேற்பு

எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் 31 பேர் கொண்ட புதிய அமைச்சரவை வியாழக்கிழமை (பிப்.16) பொறுப்பேற்றுக் கொண்டது.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமிக்கு வியாழக்கிழமை பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் வித்யா சாகர் ராவ். உடன், தலைமைச்செயலர் கிரிஜா வைத்தியநாதன், ஆளுநரின் மனைவி வினோதா ராவ்.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமிக்கு வியாழக்கிழமை பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் வித்யா சாகர் ராவ். உடன், தலைமைச்செயலர் கிரிஜா வைத்தியநாதன், ஆளுநரின் மனைவி வினோதா ராவ்.

எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் 31 பேர் கொண்ட புதிய அமைச்சரவை வியாழக்கிழமை (பிப்.16) பொறுப்பேற்றுக் கொண்டது. இதன் மூலம் தமிழகத்தில் கடந்த 10 நாள்களுக்கும் மேலான நிலவிவந்த அரசியல் நிலையற்றதன்மை முடிவுக்கு வந்தது. கடந்த 9 மாதங்களில் முதல்வராகப் பதவியேற்கும் மூன்றாவது நபர் எடப்பாடி பழனிசாமி ஆவார்.
சென்னை, கிண்டியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், 30 அமைச்சர்களுக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார். புதிய அமைச்சரவையில் கே.ஏ.செங்கோட்டையன் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் வித்யாசாகர் ராவ், அவரது மனைவி வினோதா ராவ், முதல்வராக பொறுப்பேற்கும் எடப்பாடி கே.பழனிசாமி, திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் விழா மேடையின் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். பின் வரிசையில், அமைச்சர்களாக பதவியேற்க இருந்தவர்கள் அமர்ந்திருந்தனர்.
முன்னதாக முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியையும் செய்து வைக்கும்படி ஆளுநரை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வராக பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் ஆளுநர் செய்து வைத்தார்.
முதல்வராக பொறுப்பேற்றுள்ள பழனிசாமியிடம் நிதி, பொது, இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, வனப் பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, தேர்தல், பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தம் ஆகிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதைத் தவிர்த்து, எடப்பாடி கே.பழனிசாமி ஏற்கெனவே பொறுப்பு வகித்த பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையும் அவரது வசமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நான்கு குழுக்களாக பதவியேற்பு: முதல்வருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த பிறகு, 30 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். நான்கு குழுக்களாக அவர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல் குழுவில் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் கே.ராஜு, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகிய எட்டு பேர் இடம்பெற்றிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, இரண்டாவது குழுவில் வி.சரோஜா, எம்.சி.சரோஜா, கே.சி.கருப்பணன், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், கே.ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர், ஆர்.துரைக்கண்ணு ஆகிய எட்டு பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மூன்றாவது குழுவில் ஏழு பேர் இடம்பெற்றிருந்தனர். கடம்பூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், வெல்லமண்டி என்.நடராஜன், கே.சி.வீரமணி, கே.டி.ராஜேந்திர பாலாஜி, பி.பென்ஜமின், நிலோபர் கபில் ஆகிய ஏழு பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். நான்காவது குழுவிலும் ஏழு பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
அதன்படி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.மணிகண்டன், வி.எம்.ராஜலட்சுமி, ஜி.பாஸ்கரன், எஸ்.ராமச்சந்திரன், எஸ்.வளர்மதி, பி.பாலகிருஷ்ண ரெட்டி ஆகிய ஏழு பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
இது மூன்றாவது முறை....அமைச்சர்கள் குழுக்களாக பதவியேற்பது இது மூன்றாவது முறையாகும். கடந்த ஆண்டு அதிமுக ஆட்சி மீண்டும் பொறுப்பேற்ற போது, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்பு நடந்தது.
அப்போது, ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, அமைச்சர்கள் குழுக்களாக பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்தில் இதுபோன்ற நடைமுறை முதல் முறையாக பின்பற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவையின் போதும், இப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பதவியேற்பு விழாவின் போதும் அமைச்சர்களுக்கு குழுக்களாக பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு உறுதிமொழியையும் ஆளுநர் செய்து வைத்துள்ளார்.
குழு புகைப்படம்: முதல்வராகப் பொறுப்பேற்ற எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ், அவரது மனைவி வினோதா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர். பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு, முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஆளுநருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
5 மணி நேரத்தில் ஏற்பாடுகள்: எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு நேரம் ஒதுக்கியிருந்தார். அவருடனான சந்திப்புக்குப் பிறகு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு ஒப்புதல் தெரிவித்தார்.
இதன் பின், தமிழக அரசின் பொதுத் துறை சார்பில் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன.
முக்கியப் பிரமுகர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், துறைச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com