மேக்கேதாட்டுவில் அணை கட்ட ஒப்புதலா? கர்நாடக அரசுக்கு காங்கிரஸ், மதிமுக, பாமக கண்டனம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலர்
மேக்கேதாட்டுவில் அணை கட்ட ஒப்புதலா? கர்நாடக அரசுக்கு காங்கிரஸ், மதிமுக, பாமக கண்டனம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வியாழக்கிழமை தனித் தனியே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சு.திருநாவுக்கரசர்: காவிரி ஆற்றில் மேக்கேதாட்டுவில் ரூ.5,912 கோடி செலவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டத்துக்கு மத்திய நீர் ஆணையம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழு ஆகியவற்றின் ஒப்புதலைப் பெறப் போவதாகவும் அறிவித்துள்ளது.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் மேல்பகுதியிலுள்ள கர்நாடக அரசு கீழ்ப் பகுதியில் உள்ள தமிழகத்தின் உரிமையைப் பாதிக்கும் வகையில் எந்தவிதமான திட்டங்களையும் நிறைவேற்றக் கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது.
இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீர் நிச்சயம் பாதிக்கப்படும். எனவே, தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் கர்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
வைகோ: மேக்கேதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் தடுப்பணை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது கண்டனத்துக்குரியது.
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்தாத கர்நாடக அரசு, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் அலட்சியப்படுத்திவிட்டது.
இதனால், காவிரி பாசனப் பகுதிகளில் ஒரு போக சாகுபடிக்குக்கூட நீர் இல்லாமல் பாலைவனம்போல தமிழகம் காட்சி அளிக்கிறது. மத்திய அரசின் கண் அசைவில்தான் கர்நாடகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதாகும்.
கர்நாடகம் தடுப்பணை கட்டினால் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும். 3 கோடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு அணை கட்டும் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
அன்புமணி: தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காது. அதன் பின்னர் காவிரி ஆறு இன்னொரு பாலாறாக மாறி, தஞ்சாவூர் பாசனப் பகுதிகள் பாலைவனமாக மாறிவிடக் கூடும். விவசாயிகள் தற்கொலை தொடர்கதையாகிவிடும்.
மேக்கேதாட்டு அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு எப்போது தாக்கல் செய்தாலும், தமிழக அரசின் ஒப்புதல் பெறப்படாத நிலையில், அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி கூறியிருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com