உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

தமிழக உள்ளாட்சி தேர்தலையும், அதுதொடர்பான வழக்கையும் இழுத்தடிப்பதாக மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

தமிழக உள்ளாட்சி தேர்தலையும், அதுதொடர்பான வழக்கையும் இழுத்தடிப்பதாக மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி, அதுதொடர்பான அரசாணையை எதிர்த்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், கடந்த ஆண்டு அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்தும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு டிசம்பர் 31 -க்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மாநிலத் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வானது, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. தற்போது இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
கடந்த முறை இதே அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சி தேர்தலை ஏப்ரல் மாதத்துக்கு முன்பு நடத்துவது சாத்தியமில்லை. ஆகையால், தேர்தல் தொடர்பான தகவலை தெரிவிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என, தேர்தல் ஆணையம் கோரியிருந்தது.
இந்த நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் ராமமோகனராவ், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.குமார், "மனுதாரர் கோரிய உத்தரவை மட்டும் பிறப்பிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை பொருத்தவரை, இடஒதுக்கீடு தொடர்பாக மட்டுமே வழக்கு தொடரப்பட்டது.
ஆனால், தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்' என மீண்டும் அதே வாதத்தை முன்வைத்து, கால அவகாசம் கோரினார்.
அதன் பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:
தேர்தல் அல்லது வழக்கையாவது மாநில தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும். ஆனால், இரண்டையும் இழுத்தடிக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிகாட்டுகிறீர்கள்; ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகலைகூட உங்களால் தாக்கல் செய்ய முடியவில்லை. எங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் விதத்தில், மாநில தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று கண்டனம் தெரிவித்தனர். பின்னர் அடுத்தகட்ட விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com