கீழடியில் அகழாய்வுப் பணி நிறுத்தம் ஏன்? திருச்சி சிவாவுக்கு மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா பதில்

சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழாய்வுப் பணி நிறுத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவாவுக்கு பதிலளித்து மத்திய கலாசாரத் துறை இணை அமைச்சர்
கீழடியில் அகழாய்வுப் பணி நிறுத்தம் ஏன்? திருச்சி சிவாவுக்கு மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா பதில்

சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழாய்வுப் பணி நிறுத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவாவுக்கு பதிலளித்து மத்திய கலாசாரத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா கடிதம் எழுதியுள்ளார்.
மதுரை அருகே கீழடியில் இந்திய தொல்லியல் துறையால் அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், சுடு மண்ணால் செய்யப்பட்ட காதணிகள் உள்ளிட்ட பல அரிய பொருள்கள் கிடைத்தன. இந்நிலையில், இந்த அகழ்வாராய்ச்சி திடீரென நிறுத்தப்பட்டது.
முடங்கிக் கிடக்கும் இப்பணி குறித்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, மாநிலங்களவையில் கடந்த ஜனவரி 2-ஆம் தேதி "தமிழகத்தின் கீழடி கிராமத்தில் தொல்லியல் அகழாய்வுப் பணியை தொடங்கக் கோருதல்' எனும் தலைப்பின் கீழ் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் பேசினார். இக்கோரிக்கையை திமுக உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி, பாஜக உறுப்பினர் இல.கணேசன், சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் ஆதரித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக திருச்சி சிவா தனியாக மாநிலங்களவையில் நோட்டீஸ் அளித்திருந்தார்.
இந்நிலையில், மாநிலங்களவையில் முக்கிய பிரச்னையை எழுப்புவதற்கான நோட்டீஸ் அளித்த உறுப்பினர் என்ற அடிப்படையில் திருச்சி சிவாவுக்கு, மத்திய சுற்றுலா, கலாசாரத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் மகேஷ் சர்மா கடந்த புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அதில் மகேஷ் சர்மா கூறியிருப்பதாவது:
கீழடி கிராமத்தில் இந்திய தொல்லியல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த அகழ்வாராய்ச்சி ரத்து செய்யப்படவில்லை. தாற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து அகழ்வாராய்ச்சியை மேற்கொள்வதற்கு முன்பாக, ஆய்வின் போது கிடைத்த பொருள்கள் அனைத்தும் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு தமிழக மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளன. தொல்லியல் ஆய்வு பயிற்சிக்கும் இந்த ஆராய்ச்சியின் அறிக்கை அளிக்கப்படும்.
2014-15 மற்றும் 2015-16-ஆம் ஆண்டுகளின் போது கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, சேகரிக்கப்பட்ட பொருள்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை, அடுத்த கட்டமாக அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிப் பணிக்கு மிகவும் உதவியாக அமையும்.
மேலும், தலைமைக் கணக்குக் தணிக்கையாளர் (சிஏஜி) நடத்திய தணிக்கையில் இந்திய தொல்லியல் துறையின் நிலுவை அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் தொடர்பாக சில கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். எனவே, அகழ்வாராய்ச்சி நிலுவை அறிக்கைகளை அகழ்வாராய்ச்சி கொள்கைப்படி உரிய காலத்தில் அளிக்க சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி சிவா எம்.பி. வெள்ளிக்கிழமை கூறுகையில், "கீழடி அகழாய்வுப் பணி நிறுத்தப்பட்டதற்கு நிதி பிரச்னை காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து இந்த விவகாரம் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா அளித்துள்ள பதில் மூலம், கீழடியில் தொல்லியல் ஆராய்ச்சி ரத்து செய்யப்படவில்லை என்றும் அது தாற்காலிகமான நிறுத்தம் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com