நடிகர் தனுஷை மகன் என்று உரிமை கோரிய வழக்கு: அங்க அடையாளங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் தனுஷை தங்கள் மகன் என்று உரிமை கோரி மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த ஆவணங்களில் உள்ளது போல தனுஷ் உடலில்

நடிகர் தனுஷை தங்கள் மகன் என்று உரிமை கோரி மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த ஆவணங்களில் உள்ளது போல தனுஷ் உடலில் அங்க அடையாளங்கள் உள்ளனவா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியர் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் திரைப்பட நடிகர் தனுஷ் தங்களது மூத்த மகன் என்று உரிமை கோரி, மனு தாக்கல் செய்தனர். மேலும், தங்களுக்கு பராமரிப்பு செலவாக மாதம் ரூ.65 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடிகர் தனுஷ் மனு செய்திருந்தார். இதற்கு மேலூர் தம்பதியர் பதில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், தனுஷ் தங்கள் மகன் தான் என்று நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, இரு தரப்பினரும் தங்களிடம் உள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆதாரங்களின் அசல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்னர் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மேலூர் தம்பதியர் தரப்பு வழக்குரைஞர் ஆஜராகி, நடிகர் தனுஷின் உடலில் உள்ள மச்சம் உள்ளிட்ட அங்க அடையாளங்கள் குறிப்பிடப்பட்ட 10 ஆம் வகுப்பு பள்ளி மாற்றுச் சான்றிதழை தாக்கல் செய்தார். அதே போல், தனுஷ் தரப்பிலும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதில் மச்சம் உள்ளிட்ட அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை.
இதைப் பதிவு செய்த நீதிபதி, மேலூர் தம்பதியர் தாக்கல் செய்துள்ள பள்ளி மாற்றுச் சான்றில் குறிப்பிடப்பட்டுள்ள மச்சம் உள்ளிட்ட அங்க அடையாளங்கள் நடிகர் தனுஷின் உடலில் உள்ளதா என்பதை கண்டறிந்து அதுதொடர்பாக தனுஷ் தரப்பு வழக்குரைஞர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து நடிகர் தனுஷ் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், மேலூர் தம்பதியர் அவர்களது மகன் 11ஆம் வகுப்பில் சேர்ந்து படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, திரைப்படங்களில் நடிக்கச் சென்றதாக கூறுகின்றனர். ஆனால், நடிகர் தனுஷ் அதற்கு முன்னதாகவே திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி விட்டார். இதன் அடிப்படையில் பார்க்கையில் மேலூர் தம்பதியரின் கோரிக்கையில் உண்மையில்லை என்பது தெரிகிறது என்றார்.
அப்போது நீதிபதி, இந்த வழக்கின் விசாரணைக்கு பின்னர் எந்த தரப்பு தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com