மேக்கேதாட்டு அணை விவகாரம்: கர்நாடகத்துக்கு தலைவர்கள் கண்டனம்

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர்
மேக்கேதாட்டு அணை விவகாரம்: கர்நாடகத்துக்கு தலைவர்கள் கண்டனம்

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு உள்ளிட்ட இடங்களில் இரு அணைகள் கட்டும் திட்டத்துக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தின் காவிரி உரிமையை கர்நாடக அரசு தொடர்ந்து வஞ்சிக்க முற்பட்டு வருகிறது. மேக்கேதாட்டுவின் குறுக்கே அணை கட்டும் திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி, தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும். கர்நாடகத்தின் சட்டவிரோத அணை கட்டும் திட்டத்தைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜி.ராமகிருஷ்ணன்: காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் அணை கட்ட ரூ.5,912 கோடி ஒதுக்க, கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது கண்டனத்துக்குரியது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமலாக்கவும், மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழுவை ஏற்படுத்துவதிலும் மத்திய அரசும், கர்நாடக அரசும் தமிழக மக்களை வஞ்சித்துள்ளன. இந்த நிலையில், புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் அறிவிப்பை உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்துவதுடன், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும்.
ஜி.கே.வாசன்: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, கர்நாடக அரசு தமிழகத்துக்கு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய தண்ணீரை இதுவரையில் உரிய காலத்தில் முழுமையாக வழங்கவில்லை. கர்நாடக அரசின் அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மீண்டும் கர்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கிறது. இந்தத் திட்டத்துக்கு தேசிய நீர் ஆணையம், காவிரி கண்காணிப்புக் குழு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஆகியவை அனுமதி அளிக்கக் கூடாது.
கி.வீரமணி: கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை நிறைவேற்றினால் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம் உள்பட காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.
இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கை தொடுத்து தடை உத்தரவைப் பெற வேண்டும். இந்தக் கோரிக்கைளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் சென்னை, தருமபுரி ஆகிய இடங்களில் பிப்ரவரி 23 -ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலர் வே.துரைமாணிக்கம் (இந்திய கம்யூனிஸ்ட்): தமிழகத்துக்கு எதிரான கர்நாடகத்தின் இந்தப் போக்கை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கூட்டத்தை தமிழக முதல்வர் உடனடியாக கூட்டி, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com