மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11 கன அடியாகச் சரிவு: குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கோடை துவங்கும் முன்பே மேட்டூர் அணையின் நீர்வரத்து 11 கன அடியாகச் சரிந்துள்ளதால், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11 கன அடியாகச் சரிவு: குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கோடை துவங்கும் முன்பே மேட்டூர் அணையின் நீர்வரத்து 11 கன அடியாகச் சரிந்துள்ளதால், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நிகழாண்டு தென்மேற்குப் பருவமழையும், வடகிழக்குப் பருவமழையும் பொய்த்து போனதாலும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடகம் வழங்க மறுத்ததாலும், கடந்த ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து குறுவை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
இதையடுத்து, தாமதமாகவே சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இருப்பினும், போதுமான அளவு தண்ணீர் இருப்பு இல்லாத காரணத்தால் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
தற்போது மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனக் கால்வாய் செல்லும் சில பகுதிகளுக்கு குடிநீர்த் தேவைக்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 100 கன அடிக்கும் குறைவாகவே இருந்து வருகிறது. ஆனால், குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 450 கன அடி வீதம் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தபட்ச அளவுக்கும் கீழாகச் சரிந்துள்ளது.
இந்த நிலையில், கோடை வருவதற்கு முன்பாகவே ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 11 கன அடியாகச் சரிந்தது. நீர்வரத்து இல்லாத நிலையில் மேட்டூர் அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், தொழிற்சாலைகளின் தேவைக்கும, குடிநீர்த் திட்டங்களுக்கும் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் எடுக்கப்படுவதால், கோடை காலத்தில் மேட்டூர் அணையிலிருந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் குடிநீர் பெறும் நகரங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு எற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32.50 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 11 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 450 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 8.55 டி.எம்.சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com