வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக சனிக்கிழமை (பிப்.18) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக சனிக்கிழமை (பிப்.18) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதன் மூலம், தமிழகத்தில் ஒரு வார காலமாக நிலவி வந்த அசாதாரண சூழல் முடிவுக்கு வந்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர்.
வரலாறு காணாத வன்முறை: சட்டப்பேரவை சனிக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கியதும் பேரவைத் தலைவர் தனபால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிவார் என அறிவித்தார்.
அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினார். இதே கோரிக்கையை ஓ.பன்னீர்செல்வமும், காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபுபக்கர் ஆகியோரும் வலியுறுத்தினர்.
ஆனால், பேரவை விதிகளின்படியே செயல்படுவதாகக் கூறி, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க தனபால் மறுத்துவிட்டார். பின்னர், அதிமுகவின் உறுப்பினர்கள் அனைவரும் பயத்தில் இருப்பதாகவும், அதனால் வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும் என்றும் திமுகவினர் வலியுறுத்தினர். அந்தக் கோரிக்கையையும் தனபால் நிராகரித்ததைத் தொடர்ந்து, பேரவையில் திமுக உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால், அவை போர்க்களமானது.
பேரவை 2 முறை ஒத்திவைப்பு: திமுகவினரின் வன்முறை கட்டுக்கடங்காமல் போனதைத் தொடர்ந்து 12.15 மணியளவில் அவையை மதியம் ஒரு மணிக்கு தனபால் ஒத்தி வைத்தார். மதியம் 1 மணிக்கு அவை கூடியபோதும் திமுகவினர் ரகளையை நிறுத்தவில்லை. இதற்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை பழனிசாமி முன்மொழிந்தார். எனினும், ரகளை முடிவுக்கு வராததைத் தொடர்ந்து பேரவையை பிற்பகல் 3 மணிக்கு தனபால் ஒத்திவைத்தார். பிற்பகல் 2 மணியளவில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
அழைப்பு மணி: பேரவை பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கியதும் சட்டப்பேரவை விதி 99 பிரிவு 3-இன் படி எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்தப் போவதாக தனபால் அறிவித்தார். அப்போது காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பிறகு, வாக்கெடுப்பு தொடங்குவதன் அடையாளமாக 3 முறை அழைப்பு மணி ஒலிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பேரவையின் நுழைவு வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டன. உறுப்பினர்கள் அவரவர் இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும் என்று தனபால் உத்தரவு பிறப்பித்தார்.
வாக்கெடுப்பு எப்படி? சட்டப்பேரவையில் 6 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு பகுதியாக வாக்கெடுப்பு நடைபெறும் என தனபால் கூறினார்.
அதன்படி, ஒவ்வொரு பகுதியில் இருந்தும் வாக்கெடுப்புத் தீர்மானத்தை ஆதரிப்போரை முதலில் எழுந்து நிற்கச் சொல்ல, அவரின் பெயர்களை பேரவைச் செயலாளர் ஜமாலூதீன் படித்து சரி பார்த்து, அவர்கள் எண்ணப்பட்டனர். பிறகு, தீர்மானத்தை எதிர்ப்பவர்களை எழுந்து நிற்கச் சொல்லி எண்ணப்பட்டது.
வாக்குகள் எவ்வளவு? முதல் பகுதியில் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து மொத்தம் 20 பேரும் எதிர்த்து 2 பேரும் வாக்களித்தனர். இரண்டாம் பகுதியில் ஆதரித்து 41 பேரும் எதிர்த்து 4 பேரும், மூன்றாம் பகுதியில் ஆதரித்து 47 பேரும் எதிர்த்து 4 பேரும், நான்காம் பகுதியில் ஆதரித்து 14 பேரும், எதிர்த்து ஒருவரும் வாக்களித்தனர்.
5, 6-ஆம் பகுதியில் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதால் அந்த இருக்கைகள் காலியாகவே இருந்தன. நடுநிலை நிலைப்பாட்டை எந்த உறுப்பினரும் எடுக்கவில்லை.
வாக்குகளையும் எண்ணி முடித்த பிறகு 122 வாக்குகள் அதிகமாகப் பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றதாக தனபால் அறிவித்தார்.
எதிர்த்து வாக்களிப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த 11 பேர் வாக்களித்தனர். அவர்கள் விவரம்: ஓ.பன்னீர்செல்வம், செம்மலை, நட்ராஜ், ஆறுக்குட்டி, சரவணன், மனோகரன், மாணிக்கம், எஸ்.பி.சண்முகநாதன், கே.பாண்டியராஜன், சின்னராஜ், மனோரஞ்சிதம் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தவர்கள் ஆவர்.

முதல்வருக்கு தனபால் வாழ்த்து

நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றிபெற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பேரவைத் தலைவர் தனபால், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் போன்று சிறப்பான ஆட்சியைத் தர வேண்டும் என்று வாழ்த்துத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com