வால்பாறையில் குறைந்து வரும் சோலைமந்தியின் எண்ணிக்கை

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஆனைமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட வால்பாறையில் சோலைமந்திகளின் (சிங்கவால் குரங்கு) எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாக இயற்கை பாதுகாப்பு அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது.
வால்பாறையில் குறைந்து வரும் சோலைமந்தியின் எண்ணிக்கை

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஆனைமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட வால்பாறையில் சோலைமந்திகளின் (சிங்கவால் குரங்கு) எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாக இயற்கை பாதுகாப்பு அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது.
அழிந்துவரும் உயிரினமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள சோலை மந்திகள், மாறிவரும் உணவுப் பழக்கம் மற்றும் காடுகள் வழியே கடக்கும் சாலைகளால் ஏற்படும் விபத்துகளின் காரணமாக அழிவின் விளிம்புக்கே தள்ளப்பட்டுள்ளதாக எச்சரிக்கின்றனர் சூழலியல் ஆராய்ச்சியாளர்கள்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் தற்போது 2500 முதல் 3,000 வரை மட்டுமே சோலை மந்திகள் உள்ளன. எனவே, இவற்றை காப்பாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை வனத் துறை மற்றும் பல்வேறு தன்னார்வத் தொண்டு அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.
குழுக்களின் எண்ணிக்கை குறைகிறது: வெப்ப மண்டல மழைக் காடுகளில் மட்டும் வாழும் சோலை மந்திகள், மரமேறுவதில் மிகவும் திறமை வாய்ந்தவை. 10 முதல் 20 வரையிலான எண்ணிக்கைக் கொண்ட குழுக்களாக வாழும் பழக்கம் கொண்டவை. 15 ஆண்டுகளுக்கு முன்பு 31 குழுக்களில் 460 எண்ணிக்கையிலான சோலைமந்திகள் வால்பாறை பகுதியில் இருந்தன. தற்போது வெறும் 12 குழுக்களில் 150 சோலை மந்திகள் மட்டுமே அங்கு உள்ளன.
செயற்கை உணவுகள்: சோலை மந்திகள் பெரும்பாலும் மனிதர்களை தவிர்க்க கூடியவை என்றாலும், அண்மைக் காலங்களில் மனிதர்கள் காடுகளில் வீசும் உணவுப் பண்டங்களை அவை உண்ணத் தொடங்கிவிட்டதாக வன உயிர் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக சோலை மந்திகளின் இயல்புத் தன்மை மாறி வருகிறது. அவை மனிதனின் அருகே வர தொடங்கி விட்டன.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோலை மந்திகள் பயமில்லாமல் வருவது அதிகரித்து வருகிறது. மேலும், மனிதன் தூக்கிப் போடும் உணவுக்காக காத்திருக்க தொடங்கியுள்ளன. குப்பைகளையும் அவை விட்டுவைக்க தயாராக இல்லை.
இதுகுறித்து வனத் துறை அதிகாரி ஒருவர் கூறியது:
சோலைமந்திகளுக்கு போதுமான இயற்கையான உணவுகள் வனத்தில் உள்ளன. ஆனால், சில சுற்றுலாப் பயணிகள் அவற்றிற்கு உணவு இல்லை என நினைத்து இரக்கப்பட்டு தின்பண்டங்களை வழங்கி வருகின்றனர். இதனால், அவைகளின் உணவு தேடும் பழக்கம் மறந்து போய், மனிதர்கள் தரும் உணவை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
எனவே, சுற்றுலாப் பயணிகள் குரங்குகளுக்கு தின்பண்டங்களை தர வேண்டாம். அவற்றால், அதற்கு தீங்கே ஏற்படும். ஏற்கெனவே மிகவும் அரிதான இனமாக கணக்கெடுக்கப்பட்டுள்ள சோலை மந்திகளின் எண்ணிக்கையை இது மேலும் குறைக்க கூடும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com