ரகசிய வாக்கெடுப்புக்கு இடமே இல்லை: வைகோ

நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவையிலும் ரகசிய வாக்கெடுப்புக்கு இடமே இல்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவையிலும் ரகசிய வாக்கெடுப்புக்கு இடமே இல்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டப் பேரவையில், சட்ட விதிமுறைகளின்படியே பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது என பேரவைத் தலைவர் பி.தனபால் கூறியபோதும், எதிர்க்கட்சியான திமுகவினர் நடத்திய அமளியையும், கலவரத்தையும் அனைத்து மக்களும் தொலைக்காட்சியில் காண முடிந்தது.
பின்னர் அவர்கள் வெளியேற்றப்பட்டு, எம்எல்ஏக்களை ஆறு பகுதிகளாகப் பிரித்து தனித் தனியே அவர்களை எழுந்து நிற்கச் சொல்லி வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில், 122 வாக்குகளுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெற்றி பெற்றார்.
வழக்கமாக, நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
1952-ஆம் ஆண்டில் ஜூலை 3-இல் மூதறிஞர் ராஜாஜி அமைச்சரவைக்கும், 1972 டிசம்பரில் கருணாநிதி அமைச்சரவைக்கும், 1988 ஜனவரி 28-இல் ஜானகி அமைச்சரவைக்கும் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்புகளில் எத்தகைய முறை கடைப்பிடிக்கப்பட்டதோ, அதே முறையைத்தான் சனிக்கிழமையன்றும் சட்டப் பேரவைத் தலைவர் தனபால் கடைப்பிடித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு 1999-ஆம் ஆண்டு மார்ச்சில் நடைபெற்றபோது, ஒரு வாக்கு வித்தியாசத்தில் பாஜக அரசு தோற்றுப்போனது. இந்த வாக்கெடுப்பில் நானும் (வைகோ) பங்கேற்றேன்.
ரகசிய வாக்கெடுப்பு என்பதே கிடையாது. சட்டங்களை நிறைவேற்றும்போது பெரும்பாலும் குரல் வாக்கெடுப்பில் பெரும்பான்மை உறுதி செய்யப்படும். யாராவது ஒரு உறுப்பினர் எழுந்து குரல் வாக்கெடுப்பு கூடாது. டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், அவைத் தலைவர் நிராகரிக்கக் கூடாது என்பது இதுவரை பின்பற்றப்படும் மரபாகும்.
எனவே நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவையிலும் ரகசிய வாக்கெடுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை நல்லறிவாளர்களும், கற்றோரும், அரசியலில் அக்கறை உள்வர்களும், தமிழக மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com