அதிக செயற்கைக்கோள்களை ஏவும் தொழில்நுட்பத்தில் இந்தியா சோதனை: சீனா பாராட்டு

ஒரே நேரத்தில் அதிக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் தொழில்நுட்பத்தில் இந்தியா சாதனை படைத்திருப்பதாக சீனா பாராட்டு

பெய்ஜிங்: ஒரே நேரத்தில் அதிக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் தொழில்நுட்பத்தில் இந்தியா சாதனை படைத்திருப்பதாக சீனா பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) சமீபத்தில் ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி, அவை அனைத்தையும் வெற்றிகரமாக நிலை நிறுத்தி உலக சாதனை படைத்தது.
இந்நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள சிறு செயற்கைக்கோள் தயாரிப்பு மையத்தின் தொழில்நுட்பப் பிரிவின் இயக்குநர் சாங் யாங்கி இது தொடர்பாகக் கூறியதாவது:
சிறு செயற்கைக்கோள்களை செலுத்தும் தொழில்நுட்பத்தில் சீனாவைவிட இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதன் மூலம் சிறிய ரக செயற்கைக்கோள்களை அதிக எண்ணிக்கையில்  செலுத்தும் விஷயத்தில் பிற நாடுகளை இந்தியா முந்திவிட்டது. வர்த்தகரீதியாக சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவும் விஷயத்தில் இன்னும் சீனா முன்னேற வேண்டியுள்ளது. மிகக் குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இத்துறையில் புதிய போட்டியை இந்தியா ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.
சீன அரசுப் பத்திரிகையான "குளோபல் டைம்ஸ்' இந்தியாவின் செயற்கைக்கோள் சாதனைக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில், "செயற்கைக்கோள்களை ஏவும் தொழில்நுட்பத்தில் இந்தியர்களின் சாதனை பாராட்டத்தக்கது. எண்ணிக்கை அடிப்படையில் இது சாதனைதான். ஆனால், தொழில்நுட்ப அடிப்படையில் இது மிகப்பெரிய சாதனை என்று கூறிவிட முடியாது. ஏனெனில், 104 செயற்கைக்கோள்களும் பெரும்பாலும் ஒரே வட்டப்பாதையில்தான் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. வெவ்வேறு செயற்கைக்கோள்களை, வெவ்வேறு புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தும் தொழில்நுட்பத்தில் இந்தியா இன்னும் முன்னேறவில்லை' என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com