சட்டப் பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்: பேரவைச் செயலரிடம் திமுக சார்பில் கடிதம் அளிப்பு

சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபால் மீது நம்பிக்கையின்மையைத் தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டு வருவதற்கான கடிதத்தை திமுக வழங்கியது.
சட்டப் பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்: பேரவைச் செயலரிடம் திமுக சார்பில் கடிதம் அளிப்பு

சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபால் மீது நம்பிக்கையின்மையைத் தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டு வருவதற்கான கடிதத்தை திமுக வழங்கியது.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் சட்டப் பேரவைச் செயலர் ஏ.எம்.பி.ஜமாலுதீனிடம் இதற்கான கடிதத்தை திமுக எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை நேரில் அளித்தனர். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:-
கடந்த 18-ஆம் தேதியன்று நடந்து முடிந்த சட்டப் பேரவைக் கூட்டத்தில், உள்நோக்கத்தோடு பேரவைத் தலைவர் நடந்து கொண்ட முறையின் அடிப்படையில், அவர் மீது நம்பிக்கையில்லாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
சட்டப் பேரவை தலைவர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரக் கூடிய வகையில் ஒரு கடிதத்தை முன்கூட்டியே சட்டப் பேரவைச் செயலாளரிடம் அளித்து இருக்கிறோம். அதனுடைய பிரதியை சட்டப் பேரவைத் தலைவரிடமும் வழங்கி இருக்கிறோம் என்றார்.
இதைத் தொடர்ந்து, "சட்டப் பேரவை கூட்டத்தில் உங்கள் (ஸ்டாலின்) சட்டை கிழிக்கப்பட்டது தொடர்பாக அதிமுகவினர் பலவித கருத்துகளை தெரிவித்து வருகிறார்களே?' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு ஸ்டாலின் பதிலளித்து கூறியதாவது:-
இதுகுறித்து ஆளுநரிடம் புகார் அளித்திருக்கிறோம். வரும் 23-இல் குடியரசுத் தலைவரைச் சந்தித்து புகார் அளிக்க இருக்கிறோம். இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் முறையிட்டு இருக்கிறோம். எனவே, சட்டப்படி அதை சந்திப்போம் என்றார்.
பேரவை விதி கூறுவதென்ன ?
சட்டப் பேரவைத் தலைவர் அல்லது துணைத் தலைவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்காக அரசமைப்புச் சட்டத்தின் 179-வது பிரிவு (சி) உள்பிரிவின்படி தனித்தீர்மானம் கொடுக்க வேண்டும்.
இதை, ஒரு உறுப்பினர் எழுத்து மூலமாக தீர்மான வரைவுடன் பேரவைச் செயலருக்கு 14 நாள்கள் முன்னரே அளிக்க வேண்டும். அதன் பிரதியை பேரவைத் தலைவருக்கும் கொடுக்க வேண்டும். அந்தக் காலம் முடிவடைந்தவுடன் கூட்டப்பெறும் முதல் கூட்ட நாளில் அலுவல் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.
பேரவையில் வினா-விடை நேரம் முடிவுற்றதும் உடனடியாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். நிர்ணயிக்கப் பெற்ற நாளன்று பேரவைக் கூட்டத்துக்கு தலைமைவகிப்பவர் அந்தத் தனித் தீர்மானத்தைப் படித்துக் காட்டி அதைக் கொண்டுவர ஒப்புதல் அளிக்கும் உறுப்பினர்களை அவரவர்கள் இடங்களில் எழுந்து நிற்குமாறு கேட்டுகொள்ள வேண்டும். 35-க்கும் குறையாத அளவில் உறுப்பினர்கள் எழந்து நின்று ஒப்புதல் அளிப்பின் பேரவைக் கூட்டத்துக்குத் தலைமை வகிப்பவர் பேரவையின் அனுமதி கிடைத்துள்ளது என்று அறிவிக்கவேண்டும்.
பேரவைத் தலைவர் அனுமதி அளித்துவிட்டார் எனில், அந்தத் தனி தீர்மானத்தின் மீதான விவாதம் உடனடியாகவோ அல்லது அதனை அனுமதித்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு மேல் போகாத ஒரு நாளிலோ நடைபெறுமாறு பேரவை நாள் நிர்ணயிக்கலாம் என்று விதி கூறப்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கை கூட்டத்தில்...: இந்த நிலையில், நிதிநிலை அறிக்கை தாக்கலுக்காக பேரவையானது கூடும்போது இந்த விவகாரம் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com