தாய்மொழியை மறந்தவன் வாழ்வில் உயர முடியாது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேச்சு

தாய்மொழியை மறந்தவன் வாழ்வில் உயர முடியாது என்றார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.
விழாவில் பேசுகிறார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.
விழாவில் பேசுகிறார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

தாய்மொழியை மறந்தவன் வாழ்வில் உயர முடியாது என்றார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக தாய்மொழி நாள் விழாவில் அவர் பேசியது:
எல்லா மொழிகளும் எழுத்துக்கும், சொல்லுக்கும் இலக்கணம் பேசும் நிலையில், உலகிலேயே வாழ்க்கைக்கு இலக்கணம் பேசிய பெருமையும், சிறப்பும் தமிழுக்கு மட்டுமே உள்ளது.
உலகில் ஒரு புறம் அவலமும், துன்பமும், மற்றொருபுறம் ஆரவாரமும், மகிழ்ச்சியும் என இரு வேறு நிலைகள் உள்ளன. இந்த உலகத்தைத் துன்பத்திலிருந்து இன்ப நிலைக்கு மாற்றிக் காட்டுவது தமிழ் இலக்கியம் மட்டுமே. ஒரு மொழியால் அறிவையும், ஞானத்தைப் பெற முடியும். ஆனால், வாழ்க்கையில் வீடு, பேற்றை அடைய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியது தமிழ் மொழியே.
ஒரு நாடு செல்வ வளத்தில் உயர வேண்டுமானால், நிலப்பரப்பு அல்லது இயற்கை வளம் அல்லது மனிதவளம் வேண்டும் என அறிஞர்கள் கூறுவர். நிலப்பரப்பு என்றால் சிங்கப்பூர் எப்படி வளர்ந்தது. இயற்கை வளம் என்றால் பாலைவனப் பகுதியைக் கொண்ட இஸ்ரேல் எவ்வாறு வளர்ச்சி பெற்றது. மனிதவளம் என்றால் இன்று இந்தியாவும், சீனாவும்தான் செல்வ வளத்தில் முதன்மை நாடுகளாக இருக்க வேண்டும்.
ஆனால், எந்த நாட்டில் அறிவியல் தொழில்நுட்பம் கடைக்கோடியில் உள்ள பாமர மனிதனின் வீட்டுக் கதவைத் தட்டுகிறதோ, அந்த நாடுதான் செல்வ வளத்தில் முன்னேறுகிறது. இந்த அறிவியல், தொழில்நுட்பம் எளிய முறையில் கற்றுத் தரப்பட வேண்டும். அந்தக் கல்வியை தாய் மொழியில் கற்றுத் தந்தால் அறிவியல் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி பெற முடியும். அந்த நாட்டால்தான் செல்வ வளம் பெற இயலும்.
தாயை மறந்தவனும், தாய்மொழியை மறந்தவனும் ஒரு நாளும் வாழ்க்கையில் உயர முடியாது. எனவே, எத்தனை மொழிகளைக் கற்றாலும், வீட்டில் உள்ள மழலைச் செல்வங்களுக்குத் தாய்மொழியைக் கற்றுத் தர வேண்டும். வீடுகளில், பள்ளிகளில் என அனைத்து இடங்களிலும் நம்முடைய தாய்மொழி இருக்க வேண்டும் என்ற உணர்வோடு பணியாற்றுவோம். தாய்மொழியைக் கற்க வேண்டும் என்ற சூளுரை ஏற்போம் என்றார் பொன்னம்பல அடிகளார்.
விழாவுக்குத் துணைவேந்தர் க. பாஸ்கரன் தலைமை வகித்தார். கவிஞர் தங்கம் மூர்த்தி, பாரத் கல்விக் குழுமச் செயலர் புனிதா கணேசன், மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் செயலர் சுஜாதா பாரதிதாசன், அடைக்கலமாதா கல்லூரி முதல்வர் ந. சுமதி வெங்கடேசன், அன்னை வேளாங்கண்ணி கல்லூரி முதல்வர் பெ. தேவநேசன், பான் செக்கர்ஸ் கல்லூரி பேராசிரியர் ஆனந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பல்கலைக்கழகப் பதிவாளர் ச. முத்துக்குமார் வரவேற்றார். இணைப் பேராசிரியர் சா. உதயசூரியன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com