விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணம்: 32.30 லட்சம் பேர் பயனடைவர்

தமிழகத்தில் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 32 லட்சத்து 30 ஆயிரத்து 191 விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணம்: 32.30 லட்சம் பேர் பயனடைவர்

தமிழகத்தில் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 32 லட்சத்து 30 ஆயிரத்து 191 விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்த நிவாரண உதவித் தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் உடனடியாக செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் வறட்சிப் பாதிப்பு குறித்து, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, அவர் வெளியிட்ட அறிவிப்புகள் விவரம்:
மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வறட்சிப் பாதிப்பு குறித்து களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த களஆய்வின் முடிவில் மொத்தமுள்ள 16 ஆயிரத்து 682 வருவாய் கிராமங்களில், 13 ஆயிரத்து 305 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என கண்டறியப்பட்டது.
இவற்றுள் 1,564 கிராமங்களில் பயிர்நிலை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 87 சதவீதம் வரை நிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.39 ஆயிரத்து 565 கோடி நிதியுதவி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமையை மத்தியக் குழுவினரும் ஆய்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
32.30 லட்சம் விவசாயிகள்: விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவித்தொகை வழங்கிட, வருவாய் -வேளாண்மைத் துறைகள் இணைந்து மேற்கொண்ட கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்தக் கணக்கெடுப்பின்படி, 32 லட்சத்து 30 ஆயிரத்து 191 விவசாயிகளுக்குச் சொந்தமான 50 லட்சத்து 34 ஆயிரத்து 237 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன.
பயிர் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண உதவித்தொகையாக மொத்தம் ரூ.2,247 கோடி வழங்கப்பட வேண்டியுள்ளது. இதில், வேளாண் பயிர் சாகுபடி செய்த 28 லட்சத்து 99 ஆயிரத்து 887 விவசாயிகளுக்குச் சொந்தமான 46 லட்சத்து 27 ஆயிரத்து 142 ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்ட சேதத்துக்கு ரூ.2,049 கோடி வழங்கப்பட வேண்டும்.
தோட்டப்பயிர் சாகுபடி செய்த 3 லட்சத்து 27 ஆயிரத்து 398 விவசாயிகளுக்குச் சொந்தமான 4 லட்சத்து 4 ஆயிரத்து 326 ஏக்கர் பரப்பில் ஏற்பட்ட சேதத்துக்கு ரூ.197 கோடியும், பட்டுப்பூச்சி வளர்ப்புக்காக மல்பெரி சாகுபடி செய்த 2,916 விவசாயிகளுக்குச் சொந்தமான 3,658 ஏக்கர் பரப்பிலான சேதத்துக்கு ரூ.1 கோடியும் அளிக்கப்பட வேண்டும்.
இந்த நிவாரண உதவித்தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்தப்படும்.
உதவித்தொகை எவ்வளவு?:
நெற்பயிர்களுக்கும், இதர பாசன பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ.5,465, மானாவரி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.3,000, நீண்டகால பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.7,287 மற்றும் பட்டுப்புழு வளர்ப்புக்கு ஏக்கருக்கு ரூ.2,428 முதல் ரூ.3 ஆயிரம் வரை இடுபொருள் நிவாரண உதவித்தொகையாக அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
நிவாரண உதவித்தொகை வழங்குவது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.துரைக்கண்ணு, ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய பயிர்க் காப்பீடு: 14.99 லட்சம் பேர் பதிவு
புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 14.99 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், நடப்பாண்டில் அரசின் பங்களிப்புத் தொகையான ரூ.410 கோடி வேளாண்மைத் துறை மூலமாகச் செலுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், 14.99 லட்சம் விவசாயிகள் இதுவரை பதிவு செய்துள்ளனர். 30 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.
பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகள், காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பயிர் இழப்புக்கான இழப்பீட்டுத் தொகையைப் பெற ஏதுவாக பயிர் அறுவடை பரிசோதனைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
இதுவரை 44 ஆயிரத்து 489 பயிர் அறுவடை பரிசோதனைகள் பல்வேறு பயிர்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சோதனைகளில் பெறப்பட்ட மகசூல் விவரங்களின் அடிப்படையில் விவசாயிகளுக்கு இழப்பீடுத் தொகை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களால் விரைவில் அளிக்கப்படும்.
எவ்வளவு கிடைக்கும்: பயிர்க் காப்பீடுத் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள், மாவட்டத்துக்கு ஏற்றவாறும், பயிர் இழப்புக்கு உகந்த வகையிலும் ஏக்கருக்கு ரூ.4,800 முதல் ரூ.69 ஆயிரம் வரை காப்பீட்டுத் ஈட்டுத் தொகையாகப் பெற இயலும். பயிர் அறுவடை பரிசோதனை முடிய, முடிய காப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் விடுவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண உதவித்தொகை வழங்குவது குறித்து, தலைமைச் செயலகத்தில்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com