எச்1என்1 வைரஸ் தமிழகத்தில் நிலை கொண்டுள்ளதா?

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதற்குக் காரணமான எச்1என்1 வைரஸ் தமிழகத்திலேயே நிலை கொண்டுள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எச்1என்1 வைரஸ் தமிழகத்தில் நிலை கொண்டுள்ளதா?

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதற்குக் காரணமான எச்1என்1 வைரஸ் தமிழகத்திலேயே நிலை கொண்டுள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பருவகால காய்ச்சல்: பன்றிக் காய்ச்சலை பருவகால காய்ச்சல் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துவிட்டது. எனவே, பன்றிகாய்ச்சல் உயிர்க்கொல்லி நோய் இல்லை. ஆனால் ஆரம்ப நிலையில் சிகிச்சை, தொடர் கண்காணிப்பு இல்லாவிட்டால் உயிரிழப்பு நேரக்கூடும். பருவகால காய்ச்சல் என்று கூறப்படுவதால், அதன் தீவிரத்தை பெரும்பாலான மக்கள் உணரவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழத்திலேயே நிலை கொண்டுள்ளது: பன்றிக்காய்ச்சல் எந்த விலங்குகளிடம் இருந்தும் தற்போது மனிதருக்குப் பரவுவதில்லை. மனிதரிடம் இருந்துதான் மற்றொருவருக்குப் பரவுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து பன்றிக்காய்ச்சல் வைரஸ் இந்தியாவுக்கு வந்தது. ஆனால் தற்போது இங்கேயே நிலை கொண்டுள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக முன்னாள் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் இளங்கோ கூறியது:

எச்1என்1 வைரஸின் முக்கிய தங்குமிடமாக தமிழகம் உள்ளது. இந்த வைரஸானது தமிழகத்திலேயே நிலை கொண்டுள்ளது. அந்த வைரஸ் பரவுவதற்கு ஏற்ற காலநிலை ஏற்படும்போது, அது தன் கோர முகத்தைக் காட்டுகிறது என்றார் அவர்.

புள்ளி விவரம்

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளிவிவரங்களை அரசு முறையாகப் பராமரிக்க வேண்டும். பொதுமக்களுக்கு அவற்றை மறைக்காமல், தெரிவிப்பதன் மூலம் விழிப்புணர்வை அதிகரிக்க முடியும்.


1,200 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியது:
தமிழகத்தில் சென்னை, வேலூர், சேலம், கோவை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்டப் பகுதிகளில் சுமார் 1,200 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இதனால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 15 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். மதுரையைத் தவிர பிற தென்மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை என்றார் அவர்.

இறந்தவர்களுக்கு கிருமி நீக்கம்

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் ஒவ்வொருவரையும் தனித்தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
ஒருவர் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்துவிட்டால், அவர் பயன்படுத்திய உடைகளை அழித்துவிட்டு, கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்பே உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு இறந்தவர்களின் உடலை பிறர் தொடக்கூடாது. உடலை புதைக்காமல் எரிக்க வேண்டும். இதுபோன்ற தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

6 மண்டலங்களில் கண்காணிப்பு

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் உள்ள பகுதிகள் சென்னை - திருவள்ளூர் - காஞ்சிபுரம், வேலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், நாமக்கல் - சேலம், கோவை - திருப்பூர், விழுப்புரம் - கடலூர் - புதுச்சேரி, திருச்சி - தஞ்சாவூர் - புதுக்கோட்டை என 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 6 மண்டலங்களில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கைக்குட்டையோடு பள்ளிக்கு அனுப்புங்கள்!

நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாகக் காணப்படுவதால் பன்றிக்காய்ச்சல் எளிதாக குழந்தைகளைத் தாக்குகின்றன.
மேலும் பன்றிக்காய்ச்சல் ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவுதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது, கைக்குட்டை கட்டாயம் கொடுத்து அனுப்ப வேண்டும். இருமும் போதும், தும்மும்போதும் கைக்குட்டையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும்.
மேலும் பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், கழிவறைக்குச் சென்று வந்தபிறகும், விளையாடச் சென்று திரும்பி வரும்போது என நாள் ஒன்றுக்கு சுமார் 10 முறை கைகளை கழுவி சுத்தப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு மட்டுமல்ல.. அனைத்து பொதுமக்களுக்கும் கை கழுவுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
20 சதவீதம் மட்டும் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு நேரடியாக பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. 80 சதவீதம் ஒருவர் பயன்படுத்திய இடம், பொருள்களை பிறர் பயன்படுத்தும்போது பன்றிக்காய்ச்சல் பரவுகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சுகாதாரப் பணியாளர்கள்

தமிழகத்தைப் பொருத்தவரை ஏப்ரல் 14-ஆம் தேதி வரை எச்1என்1 வைரஸ் பரவுவதற்கான சூழல் நிலவும் என்று நோய்த்தொற்று இயல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விழிப்புணர்வு மற்றும் தடுப்புப் பணிகளில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்கள், கிராமப்புற சுகாதார செவிலியர்கள் உள்ளிட்டோர் தட்டம்மை ரூபல்லா தடுப்பூசி முகாமில் பங்கேற்று வருவதால், இதற்கான பணிகளில் ஈடுபடுவோர் குறைவாக உள்ளனர். எனவே, பன்றிக்காய்ச்சலின் தீவிரம் குறையும் வரை தடுப்பூசி முகாமை மாற்றி வைத்துவிட்டு, இதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com