காலையில் கடுங்குளிர்; பகலில் சுட்டெரித்த வெயில்: ஒரே நாளில் இருவேறு காலநிலையால் அவதிக்குள்ளான மக்கள்

கோவையில் புதன்கிழமை அதிகாலையில் கடும் குளிருடன் பனிமூட்டம் நிலவிய நிலையில், நண்பகலில் திடீரென வெயில் சுட்டெரித்ததால் மக்கள் அவதிக்குள்ளானர்.

கோவையில் புதன்கிழமை அதிகாலையில் கடும் குளிருடன் பனிமூட்டம் நிலவிய நிலையில், நண்பகலில் திடீரென வெயில் சுட்டெரித்ததால் மக்கள் அவதிக்குள்ளானர்.

தமிழகம் முழுவதுமே கடுமையான வெப்பத்தால் தகித்தாலும், மேற்குத் தொடர்ச்சி மலை, பாலக்காடு கணவாய் ஆகியவற்றின் தாக்கத்தால் கோவையில் எப்போதும் வெப்பத்தின் தாக்கம் குறைந்திருக்கும்.
இதமான காலநிலைக்குப் பெயர் பெற்ற கோவை மாவட்டம், கடந்த சில ஆண்டுகளாக கோடைக் காலத்தில் பிற மாவட்டங்களைப் போலவே வெப்பத்தால் தகித்து வருகிறது. சாலையோர மரங்கள் வெட்டப்பட்டதாலும், கடந்த சில ஆண்டுகளாகப் பருவமழை பொய்த்து வருவதாலும் கோவையில் வெயில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கோவையில் கடந்த இரண்டு மாதங்களாக மாலையில் தொடங்கி மறுநாள் காலை வரையிலும் குளிரான காலநிலை நிலவி வந்தது. அதிகாலை நேரங்களில் வயல்வெளிகளில் அவ்வப்போது பனிமூட்டம் தென்பட்டாலும், மாநகரில் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு பனி இல்லை.

இந்நிலையில், புதன்கிழமை காலையில் வழக்கத்துக்கு மாறாக மாநகரில் கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது. சாலைகள் தெரியாத அளவுக்கு, எதிரே உள்ள நபர்கள் மங்கலாக தெரியும் அளவுக்குப் பனியின் தாக்கம் இருந்தது.

காலை 8 மணிக்குப் பிறகும் பல சாலைகளில் பனிமூட்டம் இருந்ததைக் காண முடிந்தது. ஆனால், 10 மணிக்குப் பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது, நண்பகல் நேரத்தில் இது மேலும் அதிகரித்து சுட்டெரிக்கத் தொடங்கியது. எதிர்பாராத இந்த வெயிலின் தாக்கத்தை, மாநகர மக்கள் நிழலில் ஒதுங்கியும், குளிர்பானங்கள், பழச்சாறு அருந்தியும், தர்பூசணி சாப்பிட்டும் தணிக்க நேரிட்டது.

கோவையில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 95 டிகிரி பாரன்ஹீட் வரையே வெயில் பதிவாகி இருந்த நிலையில், புதன்கிழமை 97 டிகிரி பதிவாகி இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாநகரின் வரலாற்றில் இல்லாத அளவாக 100.7 டிகிரி வெயில் பதிவான நிலையில், இந்த ஆண்டு அதைக் காட்டிலும் கூடுதலாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

பகல், இரவு நேர வெப்பநிலை உயரும்: இதுகுறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் பேராசிரியர் எஸ். பன்னீர்செல்வம் கூறுகையில், ’கோவையில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென வெப்பநிலை குறைந்ததால், புதன்கிழமை காலையில் பனிமூட்டம் ஏற்பட்டது. இனிவரும் நாள்களில் பகல், இரவு நேர வெப்பநிலை உயரும்.

மாநகரில் அண்மைக் காலங்களில் இரவு நேர வெப்பநிலை 59 டிகிரி முதல் 75 டிகிரி வரை இருந்தது. கடந்த சில நாள்களாக 75 டிகிரிக்கும் மேலாக இருந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை திடீரென 67 டிகிரியாக குறைந்தது. வெப்பநிலை திடீரென குறைந்ததால்தான் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது.

கோவையில் வரும் நாள்களில் இரவு, பகல் நேர வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும். இரவு நேர வெப்பநிலை 75 டிகிரி வரையிலும், பகல் நேர வெப்பநிலை 100 டிகிரிக்கும் மேலேயும் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதேநேரம் காற்றின் வேகமும் தொடர்ந்து அதிகரிக்கும்' என்றார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com