கீழடி அகழ்வாராய்ச்சி தகவல்கள் தமிழக வரலாற்றை மாற்றி அமைக்கலாம்

சிவகங்கை மாவட்டம், கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் தகவல்கள் தமிழக வரலாற்றை மாற்றி அமைக்கலாம் என டி.கே. ரங்கராஜன் எம்.பி. கூறினார்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்த மண்பானையை வியாழக்கிழமை பார்வையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டோர்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்த மண்பானையை வியாழக்கிழமை பார்வையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டோர்.

சிவகங்கை மாவட்டம், கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் தகவல்கள் தமிழக வரலாற்றை மாற்றி அமைக்கலாம் என டி.கே. ரங்கராஜன் எம்.பி. கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரங்கராஜன், வியாழக்கிழமை கீழடிக்குச் சென்று அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் இடத்தை பார்வையிட்டார். பின்னர், மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கீழடியில் ஆகழ்வாராய்ச்சியை தொடர தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. அங்கு கிடைக்கும் ஆய்வு முடிவுகள் தமிழகத்தின் வரலாற்றை மாற்றி அமைக்கலாம். தமிழகத்தில் கல்வெட்டுகள், புலவர் பாடல்கள் ஆகியன உண்டு. ஆனால் வரலாற்று சாட்சியங்கள் நம்மிடம் இல்லை. தற்போது கீழடியில் மக்கள் வாழ்க்கைமுறை, தொழிற்கூடங்கள் இயங்கியது உள்ளிட்டவற்றுக்கு சாட்சியங்கள் கிடைத்துள்ளன. மேலும், அதில் ஆய்வு நடத்தினால் வைகை ஆறு தடம் மாறியது குறித்த தகவல்கள் கிடைக்கலாம். இதுவரை நடந்துள்ள அகழ்வாராய்ச்சியின் அடிப்படையில் அங்குள்ள மக்கள் பழங்குடியினராக இல்லாமல் நாகரீக சமூகமாக வாழ்ந்துள்ளது தெரிய வருகிறது. எனவே ஆய்வைத் தொடரும்போது கூடுதல் தகவல்கள் கிடைக்கும். அங்கு கிடைத்துள்ள பொருள்களை வைத்து அதே இடத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.
மத்திய அரசு அறிவித்துள்ள பணமில்லா பரிவர்த்தனை முறை, பெரும் முதலாளிகள் எவ்வித உழைப்புமின்றி கொள்ளை லாபம் ஈட்டுவதற்கே உதவும். மத்திய அரசின் "நீட்' தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர். மருத்துவ வளர்ச்சியில் தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும்.
சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பானது, தமிழக முதல்வர்களுக்கு இதுவரை இருந்த பெருமைக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தில் பாஜகவின் பங்கும் உள்ளது. சட்டசபையில் திமுக நடந்து கொண்டது ஜனநாயக விரோதமானது. திமுகவுக்கு இருந்த பெயரை கெடுத்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை மே 14ஆம் தேதிக்குள் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு பிரச்னையிலும் நீதிமன்றம் தலையிடுவதற்கு முன்பாக அரசுகள் தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும் என்றார்.
மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநகர் மாவட்டச் செயலர் இரா. விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலர் சி. ராமகிருஷ்ணன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் என். நன்மாறன், இரா. அண்ணாத்துரை, நிர்வாகி இரா. ஜோதிராம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com