குஜராத் கழுதைகளைக் கண்டு பீதியடைந்துவிட்டார் அகிலேஷ்: பிரதமர் மோடி தாக்கு

""குஜராத் கழுதைகளைக் கண்டு உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் பீதியடைந்துவிட்டார்; ஆனால், அந்த விலங்கின் கடின உழைப்பும், விசுவாசமும் எனக்கு ஊக்கம் கொடுத்துள்ளன'' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம், பஹராய்ச் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் பிரதமர் மோடி.
உத்தரப் பிரதேச மாநிலம், பஹராய்ச் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் பிரதமர் மோடி.

""குஜராத் கழுதைகளைக் கண்டு உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் பீதியடைந்துவிட்டார்; ஆனால், அந்த விலங்கின் கடின உழைப்பும், விசுவாசமும் எனக்கு ஊக்கம் கொடுத்துள்ளன'' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பஹ்ராய்ச் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி மேலும் பேசியதாவது:
தேர்தல் நேரத்தில் எதிரெதிர் அரசியல் கட்சியினர் விமர்சித்துப் பேசுவது வழக்கம். உத்தரப் பிரதேச முதல்வரான அகிலேஷ் யாதவ், என்னையும், பாஜகவையும் தாக்கிப் பேசலாம். ஆனால், அவர், கழுதைகளை விமர்சித்துப் பேசுவது வியப்பாக இருக்கிறது. கழுதைகள், உடல் நலம் குன்றியிருந்தாலும், பசியோடு இருந்தாலும், களைப்பாக இருந்தாலும் தனது பணியை முடித்துவிடும். தங்களது எஜமானர்களுக்கும் அவை விசுவாசமாக உள்ளன.
இதேபோல், நாட்டு மக்கள் 125 கோடி பேரும் எனது எஜமானர்கள். அவர்கள் எனக்கு இடும் பணிகளை செய்து முடிக்கிறேன். கழுதைகளிடம் இருந்து ஊக்கம் பெறுவதால்தான், இவற்றையெல்லாம் என்னால் செய்ய முடிகிறது. நான் இதைப் பெருமையோடு கூறுவேன். ஆனால், முதல்வர் அகிலேஷ் யாதவ், கழுதையைக் கீழ்நிலை விலங்காகப் பார்க்கிறார். அது, விலங்குகளைக் கூட ஜாதீயக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் அவரது மனநிலையைப் பிரதிபலிக்கிறது.
சமாஜவாதி அரசு மிகவும் திறமை வாய்ந்தது. ஏனெனில் ஒட்டுமொத்த அரசே ஒருமுறை காணாமல் போன எருமைகளைத் தேடிக் கண்டுபிடித்தது. (அமைச்சர் ஆஸம் கானுக்குச் சொந்தமான மாயமான எருமைகளை காவல் துறையினர் தேடிக் கண்டுபிடித்ததை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்).
அகிலேஷ் யாதவ், குஜராத் கழுதைகளை வெறுக்கலாம். ஆனால், அந்த மாநிலம்தான் தயானந்த சரஸ்வதியையும், மகாத்மா காந்தியையும் நாட்டுக்கு கொடுத்தது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தங்கி வாழ்ந்த பூமியும் அதுதான். அகிலேஷின் வெறுப்புணர்வு, அவருக்கு அழகு சேர்க்காது.
சந்தர்ப்பவாத கூட்டணி: உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ்-சமாஜவாதி இடையேயான கூட்டணி, ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணியாகும். உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் தன்னை தோற்கடிப்பதற்காக, தனது குடும்ப உறுப்பினர்கள் சதித் திட்டம் தீட்டியதால், காங்கிரஸூடன் கூட்டணி வைத்ததாக அகிலேஷ் யாதவ், சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார். உண்மையில் மாநிலத்தின் எதிர்காலத்தைப் பற்றி அவர்களுக்கு ஒருபோதும் அக்கறை கிடையாது.
இரண்டு தினங்களுக்கு முன் வெளியான ஒடிஸா உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பலத்தை அகிலேஷ் யாதவ் புரிந்துகொண்டிருப்பார்.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியுடன் சமாஜவாதி கட்சியும் சேர்ந்து மூழ்கும். இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார் பிரதமர் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com