காற்றில் கசியும் கூவத்தூர் ரகசியம்: அந்த 10 நாட்கள்!

கடந்த ஒரு மாத காலமாக நடந்த தமிழக அரசியல் குழப்பங்களில் தலைமைச் செயலகத்தை விட கூவத்தூர் கோல்டன் பே நட்சத்திர விடுதிதான் மிகவும் முக்கிய இடம் வகித்தது.
காற்றில் கசியும் கூவத்தூர் ரகசியம்: அந்த 10 நாட்கள்!


சென்னை: கடந்த ஒரு மாத காலமாக நடந்த தமிழக அரசியல் குழப்பங்களில் தலைமைச் செயலகத்தை விட கூவத்தூர் கோல்டன் பே நட்சத்திர விடுதிதான் மிகவும் முக்கிய இடம் வகித்தது.

சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதை அடுத்து, பிப்ரவரி 8ம் தேதி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அதாவது 18ம் தேதி வரை அனைத்து எம்எல்ஏக்களும் விடுதியில்தான் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த 10 நாட்களில், விடுதிக்குள் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவ்வளவு ஏன், அந்த விடுதியை சுற்றியிருந்த கிராம மக்கள் கூட அவர்களது வீடுகளுக்குச் செல்ல கெடுபிடிகள் பின்பற்றப்பட்டன. ஒரு சமயம் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். சசிகலா அடிக்கடி கூவத்தூர் விடுதிக்குச் சென்று எம்எல்ஏக்களை சந்தித்துப் பேசி வந்தார். இதைத் தவிர வேறு எந்த தகவலும் கூவத்தூர் விடுதியில் இருந்து வெளியாகவில்லை.

ஆனால் 10 நாள் கூவத்தூர் ரகசியம் தற்போது மெல்ல காற்றில் கலந்து வருகிறது. ஆங்கில இணையதள செய்தி ஊடகம், விடுதியில் நடந்த விஷயங்களை அ முதல் ஃ வரை பிரசுரித்துள்ளது.

அதில் சில அதிர்ச்சியான தகவல்களும் இருக்கத்தான் செய்கிறது.

விடுதியில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த போது நடந்தவை குறித்து இன்னும் பிரம்மிப்பு மாறாமல் கூறியுள்ளார்கள் ஊழியர்கள்.

அதாவது, இந்த 10 நாட்கள் கூவத்தூர் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்களை வைத்திருந்ததற்கு ஆன மொத்த செலவு ரூ.50 லட்சத்துக்கும் மேல் என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இதில், கட்சி தரப்பில் இருந்து ரூ.20 லட்சம் மட்டுமே விடுதி உரிமையாளருக்கு வழங்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த பில் தொகையில், அறை வாடகை உள்ளிட்டவை மட்டுமே அடங்கும், பொருட்கள் சேதாரத்துக்கு என எந்த கட்டணமும் இடம்பெறவில்லை.

சேதாரமா? அப்படி என்ன சேதாரம் என்று கேட்கலாம்... அதற்கு விடுதி ஊழியர்கள் அந்த ஆங்கில இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில், "விடுதி முழுவதும் நாற்காலி, சேர்கள், சாப்பிடும் தட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. விடுதி முழுக்க சாப்பிடும் உணவுகள் சிந்தப்பட்டிருந்தது. ஏன் விடுதி மாடியில் கூட உணவுகள் கொட்டியிருந்தது. எம்எல்ஏக்கள் விடுதியில் இருந்து கிளம்பிய பிறகு, இரண்டு நாட்கள் விடுதி மூடப்பட்டது. பராமரிப்புப் பணிக்காக. விடுதி முழுக்க சுத்தம் செய்து, உடைந்த பொருட்களை மாற்றினோம். இதுவரை இவ்வளவு பொருட்கள் மாற்றப்பட்டதும் இல்லை, இவ்வளவு பணிகளை செய்ததும் இல்லை. எங்களுக்கே சற்று ஓய்வு தேவைப்பட்டது" என்று கூறியுள்ளார்கள்.

விடுதியின் உரிமையாளர் குறித்து வெளியான புரளிகளுக்கும் இங்கே விடை கிடைத்துள்ளது. அதாவது, கோல்டன் பே விடுதி, சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பத்துக்கு சொந்தமானது. அவர்களுக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே, விடுதி உரிமையாளருக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு உண்டு என்று கூறப்பட்டதில் எந்த உண்மையும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

அந்த 10 நாட்களும் சில எம்எல்ஏக்கள் தாங்கள் கேட்ட பொருட்கள் உடனடியாக வர வேண்டும் என்று சத்தம் போடுவார்கள். சில பெண் எம்எல்ஏக்கள், தங்கள் குடும்பத்தினரையும் உடன் வைத்துக் கொண்டனர். இவ்வளவு கூட்டத்தை எங்களால் சமாளிக்க முடியவில்லை. உணவு தயாரிக்க முடியாமல் சிரமப்பட்டோம். உடனடியாக சசிகலா தரப்பினர் சமையலுக்கு ஆட்களை கொண்டு வந்தனர்.  ஆனாலும் மற்ற பணிகளை சமாளிக்க முடியாமல் திணறினோம் என்றும் அவர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com