சாதி அரசியல் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும்: நீதிபதி என்.கிருபாகரன்

சாதி அரசியல் கட்சிகளை மக்கள் புறக்கணித்தாலே உண்மையான சமூக மேம்பாடு ஏற்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கூறினார்.

சாதி அரசியல் கட்சிகளை மக்கள் புறக்கணித்தாலே உண்மையான சமூக மேம்பாடு ஏற்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கூறினார்.

மதுரையில் ஹரிசனத் தந்தை தியாகி அமரர் அ.வைத்தியநாதய்யரின் 62-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு டாக்டர் தங்கராஜ் சாலையில் உள்ள நா.ம.ரா.சுப்பராமன் உறைவிட ஆரம்பப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது: சாதிய துவேஷம் அதிகமிருந்த காலகட்டத்தில் அடித்தள மக்களுக்காக பல எதிர்ப்புகளையும் மீறி பாடுபட்ட வைத்தியநாதய்யர் மகாத்மாவாக திகழ்ந்துள்ளார்.

செவ்வாய், வியாழன் கிரகங்களுக்கு செயற்கைக் கோள் செலுத்துவது மட்டும் உண்மையான வளர்ச்சியல்ல. அடித்தள மக்களுடன் சேர்ந்து ஏற்படும் வளர்ச்சியே நாட்டின் உண்மையான வளர்ச்சியாகும்.

அனைவரும் சமமான வளர்ச்சி பெறுவதே காந்தியடிகள் கண்ட ராமராஜ்யமாகும். ஏற்றத் தாழ்வுடன் கூடிய வளர்ச்சி உண்மையானதல்ல. கல்லாமை, இல்லாமையுடன் தீண்டாமையும் ஒழியவேண்டும்.

சாதி வேறுபாடுகளும், சர்ச்சைகளும் இன்னும் ஒழியவில்லை. சாதிக் கட்சிகள் உருவாகியிருப்பது நல்லதல்ல. சாதிய அடிப்படையிலான கட்சிகளை மக்கள் ஆதரிக்கக் கூடாது. சாதி அரசியல் சமுதாயக் கேடு. அவற்றை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

ஆங்கிலக் கல்வி பயின்றாலே முன்னேறலாம் என்பது சரியல்ல. மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் தமிழ்வழிக் கல்வியில் பயின்றவர்கள் தான்.

கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் வாங்கித் தந்த காந்தியடிகளின் கனவு நனவாக நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். சமுதாய ஏற்றத் தாழ்வுகளை நீக்கவும், வன்முறையற்ற நிலை ஏற்படவும் அனைவரும் சமமானவர்கள் என்ற நிலை ஏற்படுவது அவசியம் என்றார்.

வைத்தியநாதய்யரின் ஆலயப் பிரவேசத்தை விளக்கும் நாடகம், வில்லுப் பாட்டு, கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை மாணவ, மாணவியர் நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியில் வழக்குரைஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, அரசு அலுவலர் ஜெயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உறைவிட ஆரம்பப் பள்ளி செயலர் ஆர்.சீனிவாசன் வரவேற்றார்.

சிலைக்கு மாலை: வியாழக்கிழமை காலை செனாய் நகரில் உள்ள சேவாலயத்திலிருந்து மாணவ, மாணவியர் தியாகி அ.வைத்தியநாதய்யரின் திருவுருவப் படத்துடன் ஊர்வலமாகச் சென்று அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் பூங்கா அருகேயுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகார வழங்கல் துறை உதவி இயக்குநர் எம்.ராஜேந்திரன், பள்ளி செயலர் ஆர்.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com