தஞ்சை ஆட்சியரகம் முன்பு மார்ச் 14-இல் முற்றுகைப் போராட்டம்

காவிரி நதியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தைக் கண்டித்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு மார்ச் 14-ஆம் தேதி முதல் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது.

காவிரி நதியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தைக் கண்டித்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு மார்ச் 14-ஆம் தேதி முதல் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இக்குழுவின் தஞ்சாவூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவித்தது:
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் 66.5 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்கும் விதமாக அணைக் கட்டுவதற்காக, ரூ. 6,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில அமைச்சர் பேசியுள்ளார்.
இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்து, வரும் குறுவை பருவத்துக்குத் தேவையான தண்ணீரைப் பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25,000, விவசாயத் தொழிலாளர்களுக்குக் குடும்பத்துக்கு ரூ. 25,000, இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 15 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
காவிரி டெல்டாவில் மீத்தேன், பாறை எரிவாயு, பெட்ரோலியம், நிலக்கரி உள்ளிட்டவற்றை எடுக்கத் தடை விதித்து, முற்றிலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு மார்ச் 14-ஆம் தேதி முதல் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் மணியரசன்.
தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் த. மணிமொழியன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் இலரா. பாரதிசெல்வன், தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலர் குழ. பால்ராசு, மனிதநேய மக்கள் கட்சி வணிகப் பிரிவு மாநிலச் செயலர் ஜெ. கலந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com