யோக அறிவியலால் மட்டுமே மனித எல்லையைக் கடக்க முடியும்

யோக அறிவியலால் மட்டுமே மனித எல்லையைக் கடக்க முடியும் என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசினார்.
ஒளிவெள்ளத்தில் ஜொலிக்கும் ஆதியோகி திருமுகம்.
ஒளிவெள்ளத்தில் ஜொலிக்கும் ஆதியோகி திருமுகம்.

யோக அறிவியலால் மட்டுமே மனித எல்லையைக் கடக்க முடியும் என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசினார்.
கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில், சத்குரு ஜக்கி வாசுதேவ் மேலும் பேசியதாவது:
இங்கு ஆதியோகி சிவன் சிலை நிறுவப்பட்டிருப்பது வெறும் தொடக்கம்தான். இதைத் தொடர்ந்து மேலும் சிலைகள் நிறுவப்படும். மனிதர்கள், தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்து கொள்ளாமல் தங்களது வாழ்க்கையை வழிநடத்தி வருகின்றனர். முன்பு ஒரு காலத்தில் மழை, பூமி போன்றவற்றை மனிதர்கள் வழிபட்டனர். அதுவே பிற்காலத்தில் பேரிடர்களை ஏற்படுத்தி, மக்கள் மனதில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, மனிதர்கள் பூமியில் தங்களது வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொள்ளக் கூடிய வழிமுறைகள் குறித்து தெரியாமல் இருந்தனர். பொதுவாக, மனிதர்கள் தங்களின் சுய அனுபவத்தைக் கொண்டு நம்பிக்கையைப் பெற்றிடாமல், பலதரப்பட்ட சிந்தனைகளைக் கொண்டே தங்களுக்குள் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
ஒருவருக்கும் மற்றொருவருக்கும் இடையே உள்ள நம்பிக்கையில் உள்ள மாறுபாடுகள் காரணமாக உலகில் வன்முறைகள் ஏற்பட்டு பல மனித உயிர்களை இழந்துள்ளோம். அதன் பிறகு, அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு தனி மனிதனின் தேவைகளைத் தேடத் தொடங்கினோம்.
அதன் காரணமாக, சமுதாயத்தைச் சுற்றியிருந்த பல்லுயிர்கள், பறவைகள், விலங்கினங்கள், சுற்றுச்சூழல் ஆகியவை நம்மால் அழிக்கப்பட்டன.
உண்மை மட்டுமே அங்கீகரிக்கப்படக் கூடியது. உண்மையின் அடிப்படையே யோகாவாகும். யோகத்தை அறிவியல்பூர்வமாக ஏற்க வேண்டும் என்றார்.
முன்னதாக, ஈஷா யோக மையத்துக்கு வந்த பிரதமர் மோடியை சத்குரு வரவேற்றார். அவரை யோக மையத்தில் அமைந்துள்ள சூர்ய குண்டத்துக்கு அழைத்துச் சென்ற சத்குரு, தியானலிங்கத்தில் நடைபெற்ற பஞ்சபூர்ண ஆராதனை, லிங்க பைரவி தேவி கோயிலில் நடைபெற்ற தரிசனத்துக்குப் பிறகு விழா மேடைக்கு அழைத்து வந்தார்.
பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த யோகேஸ்வர லிங்கத்துக்கு கைலாயத் தீர்த்தத்தைப் பிரதமர் ஊற்றினார். இதன் பிறகு, ஆதியோகி சிலையைத் திறந்து வைத்தார். இதையடுத்து, ஆதியோகி குறித்த யோகா புத்தகத்தைப் பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, பொன்.ராதாகிருஷ்ணன், விஜய் கோயல், தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, காவல்துறைத் தலைவர் தே.க.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், தமிழக எம்.பி.க்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், பாஜக பொதுச் செயலர் முரளிதர் ராவ், தேசியச் செயலர் ஹெச்.ராஜா, மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநிலப் பொதுச் செயலர் வானதி சீனிவாசன், பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஒளிவெள்ளத்தில் ஜொலிக்கும் ஆதியோகி திருமுகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com