கழிவுநீர் துப்புரவுப் பணியின்போது உயிரிழந்த 141 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு

தமிழகத்தில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டியை துப்புரவு செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கி உயிரிழந்த 141 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ரூ.10 லட்சம் வழங்கியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டியை துப்புரவு செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கி உயிரிழந்த 141 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ரூ.10 லட்சம் வழங்கியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பாதாள சாக்கடை, கழிவுநீர் சேகரிக்கும் தொட்டிகளில் மனிதர்களை கொண்டு சுத்தம் செய்வதற்கு தடை விதிக்க கோரியும், துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கோரியும், சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாடம் நாராயணன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விஷவாயு தாக்கி இறந்த துப்புரவு தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலாஹ ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் உயிரிழந்த துப்புரவு தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணை செயலாளர் ஜி.லட்சுமி பிரியா அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் சாக்கடை, கழிவுநீர் தொட்டியை துப்புரவு செய்யும் பணியின்போது பலியான 141 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து, மேலும் 13 பேரின் குடும்பத்தினர் அடையாளம் காணப்பட்டு, இழப்பீடு வழங்குவதற்கான சரிபார்ப்பு பணிகள் நடந்து வருகின்றன.
"தூய்மை இந்தியா' திட்டத்தின்கீழ், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை ஏற்படுத்த ரூ.144.80 கோடி செலவில், 1 லட்சத்து 73 ஆயிரத்து 679 வீடுகளில் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 6 லட்சத்து 2,029 வீடுகளில் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. மார்ச் மாதத்துக்குள் 23,481 சமுதாய கழிப்பிடங்கள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதில் 11,410 கழிப்பிடங்கள் ரூ.94.08 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன. மாவட்டங்களை பொருத்தவரை, துப்புரவு பணி செய்பவர்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள் விசாரணையை மார்ச் 28 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com