செயலர் பதவியையும் ஏற்பதாக தீபா அறிவிப்பு

"எம்.ஜி.ஆர். அம்மா தீபா' பேரவைக்கு பொருளாளர் பதவியோடு, செயலர் பதவியையும் தானே ஏற்பதாக தீபா அறிவித்துள்ளார்.
செயலர் பதவியையும் ஏற்பதாக தீபா அறிவிப்பு

"எம்.ஜி.ஆர். அம்மா தீபா' பேரவைக்கு பொருளாளர் பதவியோடு, செயலர் பதவியையும் தானே ஏற்பதாக தீபா அறிவித்துள்ளார். மேலும், பேரவையின் கொள்கை, நிர்வாகிகள் பட்டியல் ஆகியன திங்கள்கிழமை வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-இல் புதிய அரசியல் அமைப்பைத் தொடங்கிய அவரது அண்ணன் ஜெயகுமார் மகள் தீபா, தன்னை பேரவையின் பொருளாளர் என அறிவித்துகொண்டார்.
இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் தீபா சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, தலைவராக சரண்யாவும், செயலராக ஏ.வி.ராஜாவும் நியமிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இதற்கு ஆதரவாளர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், தனது இல்லத்தில் தீபா ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: அரசியலில் ஈடுபடக் கூடாது என பலர் ஏற்படுத்திய தடைகளை மீறி, மக்கள் விரும்பியதால் அரசியலுக்கு வந்தேன். விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களுடைய எண்ணங்களைப் புரிந்துகொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.
உண்மையான அதிமுக தொண்டர்கள் ஆதரவையும், கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். பேரவையின் செயலராகவும் நானே (தீபா) செயல்படுவேன்.
தனிப்பட்ட நபராக அறிக்கைகள் எதையும் பேரவை சார்பில் வெளியிட முடியாது என்பதற்காகத்தான், இந்த திடீர் தாற்காலிக ஏற்பாடு. விரைவில் அறிக்கைகள் வெளியிடப்படும்.
பேரவையின் நிர்வாகிகள் பட்டியலும், கொள்கையும் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். அவருடன் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com