மாணவர்கள் வருகை: நெடுவாசலில் தீவிரமடையும் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிரான
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பகுதியினர்.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பகுதியினர்.

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நெடுவாசல் பகுதிக்கு வந்ததால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்தத் திட்டத்தை எதிர்த்து, கடந்த 10 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் இப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்பினர் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நெடுவாசல் பகுதியில் திரண்ட சிறுவர்கள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர், இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திட்டத்தை உடனே ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இதேபோல, நெடுவாசல் அருகே கோட்டைக்காடு பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்கக் கோரியும், அப்பகுதியில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என்றும் அப்பகுதி சிறுவர்கள், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுவாசலில் நடைபெற்றுவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் நெடுவாசல் போராட்ட களத்துக்கு வந்தனர். இதனால், இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிரான போராட்டம் மேலும் வலுவடைந்துள்ளது. இதில் பங்கேற்றுள்ள மாணவர்கள், இளைஞர்கள் நெடுவாசலை மீட்காமல் வீடுவாசல் செல்லமாட்டோம் என்ற முழக்கங்களோடு போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்த தமிழ்நாடு வணிகர் சங்கக் கூட்டமைப்பு தலைவர் வெள்ளையன், செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு மீட்பு போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்களின் எழுச்சியைக் கண்ட பிறகே, பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பான விற்பனையை தடை செய்யும் துணிச்சல் வணிகர் சங்கத்துக்கு வந்தது. அந்த இளைஞர் பட்டாளம் நெடுவாசலையும் மீட்பதற்காக களம் இறங்கியுள்ளனர். அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று வெற்றி காண்பார்கள். பாலைவனப் பகுதியில் மேற்கொள்ளவேண்டிய எரிவாயு சோதனைகளை சோலைவனமாக காட்சிதரும் நெடுவாசல் பகுதியில் மத்திய அரசு ஏன் செய்யவேண்டும். புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்தின் பெரும் பகுதி விவசாயத்தை அழிக்கும் இத்திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்றார்.
நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நிலங்களைப் பார்வையிட்ட திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடையே பேசியது:
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நெய்வேலியில் நிலக்கரி இருப்பது கண்டறியப்பட்டு ஒரு கிராமத்தில் மட்டும் நிலக்கரி எடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. பிறகு இதுவரை நான்கு சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியைச் சுற்றியுள்ள 420 கிராமத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயமும், கால்நடைகளும் அழிந்தன. அப்போது மக்கள் விழிப்புணர்வு பெறாத நிலையில், வேலைவாய்ப்பு பெருகும் என சிலர் கூறிய பொய் வாக்குறுதிகளை நம்பி திட்டத்தை அனுமதித்து தங்களது வாழ்வாதாரத்தையே இழந்துள்ளனர்.
நெடுவாசல் பகுதியில் மட்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப் போவதாக மத்திய அறிவித்திருந்தாலும், அது நெடுவாசல் விவசாயிகளை மட்டும் பாதிக்காது. சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமத்திலும் விவசாயம் அழியும். இதனால், இத்திட்டத்தை இப்பகுதியில் அனுமதிக்கக் கூடாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com