இயற்கை எரிவாயு திட்டத்தை கைவிட வேண்டும்: சீமான்

விவசாயிகளை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

விவசாயிகளை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று, அவர் பேசியது:
ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கினால், நிலத்தடியில் இருந்து நீர் முழுவதுமாக வெளியேற்றப்படும். இதனால், சோலைவனமாக உள்ள இப்பகுதி பாலைவனமாக மாறும். மேலும், நிலத்தடி நீரை வெளியேற்றுவதால் கடல்நீர் உட்புகுந்து இப்பகுதி உப்பளமாக மாறும் சூழல் உருவாகும்.
காவிரி, முல்லை பெரியாற்றுக்குக் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும் என்பதால், அதை திசைதிருப்புவதற்காகவே தற்போது இயற்கை எரிவாயு திட்டத்தை தமிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்த முயற்சிக்கிறது.
காரைக்காலில் இத்திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி உடனே தெரிவித்தார். ஆனால், 10 நாட்களுக்கும் மேலாக இங்கு போராட்டம் நடைபெற்றும், தமிழக முதல்வர் இதுவரை மெளனமாக உள்ளார். பிரதமரை சந்தித்து தமிழகம் திரும்பும்போது ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டம் கைவிடப்படும் என்ற உத்தரவாதத்தை, முதல்வர் மக்களுக்கு அளிக்க வேண்டும். தமிழக மக்கள், இளைஞர்களின் போராட்டத்தை இழிவுப்படுத்தும் தமிழக பாஜக தலைவர்களின் கருத்து கண்டனத்திற்குரியது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com