கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடை மூடியதற்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி

திருநெல்வேலி மாவட்டம், கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

திருநெல்வேலி மாவட்டம், கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சொந்த ஊர் திருநெல்வேலியில் உள்ள கலிங்கப்பட்டி. பூரண மதுவிலக்கு கோரிக்கைக்காக போராடிய சமூக ஆர்வலர் சசி பெருமாளின் மறைவுக்கு பிறகு தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தக் கோரிக்கைக்கு அப்பகுதி மக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை மூடுவதற்கு ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நடவடிக்கையை எதிர்த்தும் கலிங்கப்பட்டியில் உள்ள மதுபானக் கடையை மூடக் கோரியும் மதிமுக பொதுச் செயாளர் வைகோவின் சகோதரரும் கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான வை.ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்தார். இதில், ’ஊர் மக்களின் நலனை ஊராட்சி நிர்வாகமே நன்றாக அறியும். அந்த அடிப்படையில் கலிங்கப்பட்டியில் மதுக்கடை வேண்டாம் என்று ஊராட்சி மன்றம் முடிவு எடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஊர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் மதுபானக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும்' என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாவட்ட ஆட்சியர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு திங்கள்கிழமை பரிசீலித்தது. அப்போது, ’உயர் நீதிமன்றமே இந்த விவகாரத்தில் சரியான உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தை மேற்கொண்டு விசாரிக்க முகாந்திரம் இல்லை' எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com