கேரள நடிகை கடத்தலில் தொடர்புடையவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த கோவை இளைஞர் கைது

கேரள நடிகை கடத்தலில் தொடர்புடைய இருவருக்கு அடைக்கலம் கொடுத்த கோவையைச் சேர்ந்த இளைஞரை கேரள காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

கேரள நடிகை கடத்தலில் தொடர்புடைய இருவருக்கு அடைக்கலம் கொடுத்த கோவையைச் சேர்ந்த இளைஞரை கேரள காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கடந்த 17-ஆம் தேதி காரில் திருச்சூருக்கு வந்து கொண்டிருந்தபோது, மற்றொரு வேனில் வந்த 5 பேரால் கேரள நடிகை கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார்.
இதுகுறித்து அந்த நடிகை அளித்த புகாரின் பேரில், நெடும்பாசேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, நடிகையின் கார் ஓட்டுநர் மார்ட்டின், முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனில், விஜேஷ், மணிகண்டன் உள்ளிட்ட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். முன்னதாக, பல்சர் சுனில், விஜேஷ் ஆகியோர் கோவைக்கு 19ஆம் தேதி தப்பி வந்துள்ளனர். விஜேஷின் நண்பரான கண்ணூரைச் சேர்ந்த சார்லி (28), பீளமேடு ஸ்ரீராம் நகரில் தனது வீட்டில் இருவருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கேரள காவல்துறையினர் பீளமேடு வருவதற்கு முன்னரே பல்சர் சுனிலும், விஜேஷும் தப்பிச் சென்றனர். சார்லியும் தலைமறைவானார்.
ஆனால், அவர்களை நான்கு நாள்களுக்கு முன்னர் எர்ணாகுளத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இருவரையும் கோவைக்கு அழைத்து வந்து அவர்கள் தங்கியிருந்த வீடுகளில் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், எர்ணாகுளத்தில் ஹோட்டல் அருகே சார்லியை மாநகர காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர். பல ஆண்டுகளாக விஜேஷ் தனது நண்பர் என்றும், நடிகை கடத்தலில் தொடர்பு உடையவர்கள் என்று தெரியாததாலேயே அடைக்கலம் கொடுத்ததாகவும் காவல்துறையினரிடம் சார்லி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நடிகை கடத்தல் விவகாரத்தில் மலையாள நடிகர்கள், கேரள அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், சார்லியின் அறையில் கைப்பற்றப்பட்ட கையடக்க கணினி, செல்லிடப்பேசியில் ஏதேனும் பதிவுகள் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக கேரள காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com