’ஹைட்ரோ கார்பன்' திட்டத்தை தொடர வேண்டாம்: பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழகத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள ’ஹைட்ரோ கார்பன்' ஆய்வுத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள ’ஹைட்ரோ கார்பன்' ஆய்வுத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக தில்லிக்கு மூன்று நாள் பயணமாக எடப்பாடி கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை வந்தார். இதைத் தொடர்ந்து, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் திங்கள்கிழமை மாலை 5.45 மணிக்கு முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேசினார். சுமார் 25 நிமிடங்கள் இச்சந்திப்பு நடைபெற்றது.
அப்போது தமிழக நலன் சார்ந்த மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தக் கூடிய திட்டங்களுக்கு நிதி, தமிழக வறட்சி நிலைமை, இலங்கைத் தமிழர் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்னை உள்ளிட்டவை தொடர்பான கோரிக்கை மனுவை முதல்வர் அளித்தார்.
இது குறித்து பின்னர் தமிழ்நாடு இல்லம் திரும்பிய முதல்வர் பழனிசாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநிலத்துக்கு நிதி: தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்றுத் தந்த நடவடிக்கைக்காக பிரதமரிடம் நன்றி தெரிவித்தேன். வறட்சி நிவாரணத்துக்கு தமிழகம் கோரியுள்ள ரூ.39,566 கோடி; ’வர்தா' புயல் நிவாரணத்துக்கு ரூ.22,523 கோடி, நிலுவைத் திட்டங்களுக்குரிய ரூ.17,333 கோடி நிதியை மத்திய அரசு துரிதமாக வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.
மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்களின் நலன் கருதி ’நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட ’தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு விலக்கலுக்கான சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்க மத்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்; தஞ்சாவூரில் ’எய்ம்ஸ்' மருத்துவமனையை விரைவில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.
நதிகள் பிரச்னை: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை அடிப்படையில், அதற்கான ஒப்புதலை வழங்க வேண்டும்; காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை விரைவில் அமைக்க வேண்டும்; தமிழகத்தின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய தீபகற்ப நதிகளான மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, தென்னாறு, பாலாறு, காவிரி, வைகை, குண்டாறு ஆகிய நதிகளையும், பம்பா - அச்சன் கோயில், வைப்பாறு நதிகளையும் இணைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன்.
மீனவர்கள் விவகாரம்: மீனவர்கள் சிறப்பு தொகுப்புதவித் திட்டத்துக்காக ரூ.1,500 கோடி வழங்க வேண்டும்; இன்றைய தேதி வரையிலும், இலங்கை சிறைகளில் உள்ள 35 தமிழ் மீனவர்களை விடுவிக்க வேண்டும்; 120 மீன் பிடிப் படகுகளை மீட்க வேண்டும்; இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தேன்.
கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை நிலைநாட்ட வேண்டும். பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதியில் மீன் பிடிப்பு உரிமையை இந்தியர்களுக்கு வழங்குவதன் மூலம்தான் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை பிரதமரிடம் தெளிவுபடுத்தினேன்.
இலங்கைத் தமிழர் நலன்: இலங்கைத் தமிழர்களுக்கு அந்நாட்டில் வசிக்கும் சிங்களர்களுக்கு இணையாக வாழக் கூடிய சூழலை உருவாக்கி, அதற்கு வகை செய்யும் திருத்தத்தை இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் செய்ய அந்நாட்டு அரசை வலியுறுத்துமாறு பிரதமரை கேட்டுக் கொண்டேன். தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் கோரினேன்.
நெடுவாசல் விவகாரம்: காவிரி டெல்டா பகுதியில் நிலத்தில் இருந்து மீத்தேன் எடுக்கும் திட்டத்தால் விவசாயம் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் அத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா குரல் கொடுத்தார். அதுபோல, நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் சம்பந்தப்பட்ட விவசாயிகளைக் கலந்து ஆலோசிக்காமலும் மாநில அரசின் ஒப்புதலின்றியும் ’ஹைட்ரோ கார்பன்' திட்டத்தை மேற்கொள்ள வேண்டாம் என பிரதமரை கேட்டுக் கொண்டேன். இந்தக் கோரிக்கைகளை பிரதமர் கவனமாகக் கேட்டுக் கொண்டார் என்றார் பழனிசாமி.
மக்கள் கருத்தை கேட்டறிந்த பிறகே முடிவு: மத்திய அரசு
’ஹைட்ரோ கார்பன்' திட்ட ஆய்வுப் பணிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களின் கருத்தை அறிந்த பிறகே முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் நெடுவாசல் விவகாரம் பற்றி பேசிய போது, ’தமிழகத்தைப் போல மேலும் ஆறு மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அங்கு இதுபோல எதிர்ப்பு வரவில்லை. ’ஹைட்ரோ கார்பன்' திட்டம் தொடர்பாக மக்களின் கருத்தை முறைப்படி அறிந்து அதன் பிறகே அதை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும். மக்களுக்கு பாதிப்பு வருமானால், இத்திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்' என்றார். என்னைப் பொருத்த வரையிலும், மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் திட்டம் அமையுமானால், அதைக் கொண்டு வருவதில் தவறு இல்லை என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com