பாலமேட்டில் தடையை மீறி ஜல்லிக்கட்டு; போலீஸார் தடியடி

மதுரை மாவட்டத்தில், 14 இடங்களில் தடையை மீறி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. பாலமேட்டில் தடையை மீறி காளைகள் அவிழ்த்து விடப்பட்டதால் போலீஸார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர்.
பாலமேட்டில் தடையை மீறி அவிழ்த்து விடப்பட்ட காளையை பிடிக்கும் வீரர்கள்.
பாலமேட்டில் தடையை மீறி அவிழ்த்து விடப்பட்ட காளையை பிடிக்கும் வீரர்கள்.

மதுரை மாவட்டத்தில், 14 இடங்களில் தடையை மீறி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. பாலமேட்டில் தடையை மீறி காளைகள் அவிழ்த்து விடப்பட்டதால் போலீஸார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக, மாவட்டம் முழுவதும் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை தடையை மீறி 14 இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், மதுரை நகர் மாடக்குளம், ஆணையூர், அவனியாபுரம், முடக்காத்தான், புது விளாங்குடி, அலங்காநல்லூர், பாறைப்பட்டி, மாங்குளம், மேலூர் தாலுகா பகுதியில் பதினெட்டாங்குடி, அரிட்டாப்பட்டி, வல்லாளபட்டி, நாவினிப்பட்டி, கொட்டாம்பட்டி, வலையங்குளத்துப்பட்டி ஆகிய கிராமங்களில் தடையை மீறி 10க்கும் மேற்பட்ட காளைகளை கிராம மக்கள் அவிழ்த்து விட்டனர். இதனை, ஏராளமான மாடுபிடி வீரர்கள் பிடித்தனர். ஒரு சில கிராமங்களில் மாட்டை பிடித்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பாலமேட்டில்... பாலமேடு பகுதியைச் சேர்ந்த 7 சமுதாயத்தினர், கோயில் காளைகளுடன் பேருந்து நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை காலை திரண்டனர். அங்கு கோயில் காளைகளுக்கு அலங்காரம் செய்து 6 காளைகளையும் ஊர்வலமாக வாடிவாசலுக்கு அழைத்து வந்தனர். அப்போது, ஏராளமான போலீஸாரும் பாதுகாப்பாக உடன் வந்தனர். வாடிவாசலுக்கு வந்தவுடன் கோயில் காளைகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர், மாலைகள், புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு கற்பூர ஆரத்தியும் காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வாடிவாசல் முன்பாக காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் கூட்டத்துக்குள் புகுந்ததால் பொதுமக்களும், போலீஸாரும் சிதறி ஓடினர்.
தடியடி: காளைகளை அவிழ்த்து விட்டவர்களை பிடிக்க முயன்றபோது, போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்பட்டது. அப்போது, கூட்டத்தினரை கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் கூட்டம் கலைந்தது.
இதற்கிடையே, பாலமேட்டின் குறுக்குத் தெருக்கள் வழியாக காளைகளை அழைத்து வந்து வாடிவாசல் அருகே அவிழ்த்து விட்டனர். இதேபோல 10-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன. இதையடுத்து பாலமேட்டில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கடையடைப்பு: இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்காததைக் கண்டித்து, பாலமேட்டில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் புறக்கணித்தனர். வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து கடைவீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் கடைள், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
40 பேர் கைது: மதுரை நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய சம்பவங்களில், காளைகளை அவிழ்த்து விட்டவர்கள் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்தவர்கள் என 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அலங்காநல்லூரில் போலீஸ் குவிப்பு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. இங்கு தடையை மீறி திங்கள்கிழமை ஜல்லிக்கட்டு நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வாடிவாசல் பகுதியை கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாகவே, போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
மேலும், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதைத் தடுக்க அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களின் பெயர்ப் பட்டியலை தயாரித்து, அவர்களிடம் தடையை மீறி ஜல்லிக்கட்டுக்கு காளையை கொண்டு செல்ல மாட்டோம் என்று உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்து பெற்றுள்ளனர்.

அசம்பாவிதம் ஏதுமில்லை

மதுரை மாவட்டம், பாலமேட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் செய்தியாளர்களிடம் கூறியது: பாலமேடு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை. பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு முழுமையாக ஒத்துழைத்துள்ளனர் என்றார்.

ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை

ஊரகக் காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி கூறியது: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. பூஜை நடத்துவதற்காக காளைகளை ஊர்வலமாக அழைத்து வந்தபோது, சிலர் காளைகளை அவிழ்த்து விட்டனர். அவர்கள் குறித்த அடையாளம் கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். அப்பகுதியில் 600க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com