கடைகள் அடைப்பு, ரயில் போக்குவரத்து துண்டிப்பு

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டமாக தீவிரமடைந்தது.
மதுரை தத்தனேரி ரயில்வே பாலத்தில் கோவை - நாகர்கோவில் பயணிகள் ரயிலை சிறை பிடித்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை இரவு வரையிலும் தொடர்ந்த போராட்டம்.
மதுரை தத்தனேரி ரயில்வே பாலத்தில் கோவை - நாகர்கோவில் பயணிகள் ரயிலை சிறை பிடித்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை இரவு வரையிலும் தொடர்ந்த போராட்டம்.

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டமாக தீவிரமடைந்தது. மதுரை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. விமான நிலையத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கடைகள் அடைப்பு, பேருந்து, ஆட்டோக்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மாநகரில்: மதுரை தமுக்கம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கெல்லாம் லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் கோரிப்பாளையம் தேவர் சிலை ரவுண்டானா முதல் தல்லாகுளம் அவுட் போஸ்ட் பெரியார் சிலை சந்திப்பு வரை சித்திரைத் திருவிழா போல் திரும்பிய திசையெல்லாம் மக்கள் கூட்டமாக காட்சியளித்தது.
மாணவர்களின் போராட்டத்துக்கு அருகே கட்சியினர் போராட்டம் நடத்தியதிற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ரயில் போக்குவரத்து துண்டிப்பு: தத்தனேரி பாலத்தில் மாணவர்களால் சிறை பிடிக்கப்பட்ட கோவை-நாகர்கோவில் ரயில் விடுவிக்கப்படவில்லை. இதனால் தென்மாவட்ட ரயில்கள் விருதுநகர், மானாமதுரை வழியாகத் திருப்பிவிடப்பட்டன. மதுரைக்கு ரயில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.
விமான நிலையம் முற்றுகை:
பெருங்குடியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்வலமாக விமான நிலையம் நோக்கி சென்ற அவர்களை வாகன கட்டண வசூல் மையம் முன்பு போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதேபோல், பாலமேடு, வாடிப்பட்டி, திருமங்கலம், மேலூர், திருப்பரங்குன்றம், தே. கல்லுப்பட்டி, பேரையூர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள யானை மலை மீது ஏறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3ஆவது நாளாக மாணவ, மாணவியர், பொதுமக்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வணிகர்கள் கடையடைப்பு செய்து போராட்டத்திலும் பங்கேற்றனர். தலைமை அரசு மருத்துவமனை முன்பு மருத்துவர் சங்கமும், செவிலியர்கள் சங்கமும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமேசுவரம் மீனவர்கள் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகளில் கருப்புக்கொடி கட்டியும்,கையில் கருப்புக்கொடி ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், தேவகோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் கடையடைப்பும் போராட்டமும் மறியலும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com