காற்றழுத்தத் தாழ்வு நிலை: மிதமான மழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் தாய்லாந்து அருகே உருவான குறைந்த காற்றழுத்தத் நிலையானது மேற்கு நோக்கி நகர்ந்து அந்தமான் அருகே நிலை கொண்டிருந்தது. காற்றழுத்தத் தாழ்வு நிலையானது வலுப்பெறாமல் தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
அந்தமான் அருகே இருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது தற்போது தென்வங்கக் கடலின் மையப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக கடலூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஆங்காங்கேயும் லேசானது முதல் மிதமானது வரையான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரை ஓரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
காற்றழுத்தத் தாழ்வு நிலையின் நகர்வைப் பார்க்கும்போது அடுத்தடுத்து தென்தமிழக பகுதியில் அதிகமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சம் 40 மி.மீ., வரை மழை பெய்யக்கூடும். காற்றழுத்தத் தாழ்வுநிலையானது தமிழகத்தை நெருங்கும்போது ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.
பனி குறையும்: மழை பெய்யத் தொடங்கும்போது தற்போது காணப்படும் பனிப்பொழிவு குறையத் தொடங்கும். தற்போது வடகிழக்கு திசையில் காற்று வீசி வருவதால் வெப்பநிலை குறைய வாய்ப்பில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com