ஜல்லிக்கட்டு: தமிழகத்தில் 24 விரைவு ரயில்கள் ரத்து

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக வெள்ளிக்கிழமை ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போராட்டத்தால் 24 விரைவு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே
ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் வெள்ளிக்கிழமை வெறிச்சோடிய சென்னை எழும்பூர் ரயில் நிலையம்.
ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் வெள்ளிக்கிழமை வெறிச்சோடிய சென்னை எழும்பூர் ரயில் நிலையம்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக வெள்ளிக்கிழமை ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போராட்டத்தால் 24 விரைவு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கடும் புயலின்போதும், வெள்ளத்தின்போதும்கூட இவ்வளவு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படவில்லை. ஆனால், ஜல்லிக்கட்டு தொடர்பாக இளைஞர்களின் போராட்டம் காரணமாக தெற்கு ரயில்வேயின் சேவை வெள்ளிக்கிழமை முற்றிலுமாக முடங்கியது.
ரத்தான விரைவு ரயில்கள்: சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி விரைவு ரயில், ராமேஸ்வரம் செல்லும் சேது விரைவு ரயில், தூத்துக்குடி செல்லும் முத்துநகர் விரைவு ரயில், நெல்லை விரைவு ரயில், செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயில், மதுரை செல்லும் பாண்டியன், ராமேசுவரம் விரைவு ரயில்கள், மங்களூரு விரைவு ரயில்கள் ஆகிய ரயில்கள் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டன. இதனால் தென்மாவட்ட பயணிகள் அவதியுற்றனர். மேலும் கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயிலும் ரத்து செய்யப்பட்டது.
மேலும், சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் சிறப்புக் கட்டண ரயிலும் ரத்து செய்யப்பட்டது. மேலும், தென்மாவட்டத்தில் இருந்து எழும்பூர் புறப்படும் ரயில்களான நெல்லை விரைவு, முத்துநகர் விரைவு, திருச்செந்தூர் விரைவு, கன்னியாகுமரி விரைவு, பொதிகை விரைவு ரயில்கள் என ஒட்டுமொத்தமாக அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், வெள்ளிக்கிழமை புறப்பட்ட பகல்நேர வைகை விரைவு ரயில் திண்டுக்கல்லில் நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வெள்ளிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.
சென்னை சென்ட்ரலில்: சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ஆலப்புழா விரைவு, எர்ணாகுளம் சிறப்பு ரயில் ஆகியவை வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டன. மேலும், சென்னை சென்ட்ரல் நோக்கி வரும் திருப்பதி விரைவு, பிருந்தாவன் விரைவு, ஆலப்புழா விரைவு ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், சென்ட்ரல் மார்க்கமாக வந்த பிருந்தாவன், திருவனந்தபுரம், பெங்களூரு உள்ளிட்ட விரைவு ரயில்கள் காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டையில் நிறுத்தப்பட்டன.
5 மணி நேர தாமதம்: தென்மாவட்டங்களில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை வர வேண்டிய விரைவு ரயில்கள் அனைத்தும் 5 மணி நேரம் தாமதமாக வந்தடைந்தன.
இதில் முக்கியமாக மதுரையில் நடந்த மறியல் போராட்டத்தால் தென்மாவட்ட ரயில்கள் விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன.
இதனால் நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி, அனந்தபுரி, திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் வழக்கமான நேரத்தைவிட 5 மணி நேரம் தாமதமாக எழும்பூர் வந்தடைந்தன.
கன்னியாகுமரி விரைவு திண்டிவனம், மேல்மருவத்தூர் நிலையங்களுக்கு வந்தபோது இளைஞர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த ரயில் மிகவும் தாமதமாக எழும்பூர் வந்து சேர்ந்தது. மேலும், திருச்சி -மதுரை, மதுரை -திருநெல்வேலி, கோவை - பாலக்காடு இடையிலான பாசஞ்ஜர் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
சென்னையில் இருந்து: சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் பாசஞ்ஜர் ரயில் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. அதேபோல கோவை, ஈரோடு, திருப்பூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் சில ரயில்கள் ஜோலார்பேட்டை வரை மட்டுமே இயக்கப்பட்டன. தமிழகத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக 50 -க்கும் மேற்பட்ட பாசஞ்ஜர் ரயில் சேவைகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டன. மேலும், 60 பாசஞ்ஜர் ரயில் சேவைகள் மாற்று வழிப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எதிரொலியாக சனிக்கிழமை, சென்னை எழும்பூர் -ஈரோடு -சென்னை எழும்பூர் விரைவு ரயில் ரத்து செய்யப்
பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com