அவசரச் சட்டம்தான் நிரந்தரத் தீர்வு: பன்னீர்செல்வம்

தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டமே நிரந்தரமான சட்டம். அதுதான் நிரந்தரத் தீர்வு என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அவசரச் சட்டம்தான் நிரந்தரத் தீர்வு: பன்னீர்செல்வம்

தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டமே நிரந்தரமான சட்டம். அதுதான் நிரந்தரத் தீர்வு என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுக்காக அவசரச் சட்டம் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் சனிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:-
வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரிய உரிமையான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான தடை, தமிழக அரசின் அவசரச் சட்டத்தால் முழுமையாக நீக்கப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து, திங்கள்கிழமை (ஜனவரி 23) தொடங்க இருக்கும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் அதற்குரிய சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டு, முழுமையான சட்டமாக நிறைவேற்றப்படும் என்றார்.
இதையடுத்து, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:-
கேள்வி:- இது நிரந்தரத் தீர்வாகுமா? போராட்டத்தை விலக்கிக் கொள்ள மாட்டோம் என்று மாணவர்கள் கூறியிருக்கின்றனரே?
பதில்:- அவசரச் சட்டமானது 6 மாத காலங்களுக்கு நடைமுறையில் உறுதியாக இருக்கும். அதற்குள் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டு, சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் காலதாமதம் இல்லாமல் உரிய சட்டம் உருவாக்கப்படும்.
கேள்வி:- ஜல்லிக்கட்டு ஞாயிற்றுக்கிழமை நடத்த சாத்தியமில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அனைவரும் வந்த பிறகே அதை நடத்த முடியும் என்றும் கூறியிருக்கின்றனரே?
பதில்:- தமிழக அரசின் சார்பில் பேசுகிறேன்.
கேள்வி: ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசே சட்டம் இயற்ற முடியும் என்றபோது, இதை முன்பே செய்திருக்கலாமே?
பதில்:- அதற்குரிய நேரம் இப்போதுதான் வந்திருக்கிறது. அதை விரைவாக, முழுமையாகச் செய்து காட்டியிருக்கிறோம்.
கேள்வி:- நிரந்தரத் தீர்வு ஏற்படும் வரை போராடுவோம் என்று மாணவர்கள் கூறியிருக்கிறார்களே?
பதில்:- இதுதான் நிரந்தரத் தீர்வு.
கேள்வி:- பல முக்கியப் பிரச்சினைகளில் முதல்வரின் பங்கு முக்கியமானது. ஆனாலும் பல விமர்சனங்கள் கூறப்பட்டதே?
பதில்:- தமிழகத்தின் மீதும், தமிழக மக்களின் முன்னேற்றம் மீதும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மிகுந்த அக்கறை கொண்டு நல்லாட்சி நடத்தி வந்தார். அதன்படி, தமிழகத்தின் உரிமைக்கு எப்போதெல்லாம் பங்கம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அதைத் தடுத்து நிறுத்தி உரிமையைப் பெற்றுத் தருபவராகத்தான் அவர் இருந்தார்.
அவரைப் பின்பற்றி தமிழக அரசின் சார்பாகவும், அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா சார்பிலும் பிரதமருக்கு தொடர்ந்து கடிதம் எழுதப்பட்டது.
தடையை நீக்குவதற்கு அதிமுகவும், தமிழக அரசும் போராடி வந்திருக்கிறது. எனவே யாரும் அச்சப்படவோ, சந்தேகப்படவோ அவசியமில்லை. உரிய சட்ட முன்வடிவு வரைவு வரும் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும்.
பிரதமரை அண்மையில் சந்தித்து, ஜல்லிக்கட்டு நடத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தேன். இதற்கான முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டால் மத்திய அரசு உறுதியாக துணை நிற்கும் என்று பிரதமரும் உத்தரவாதம் அளித்தார். இந்த வகையில் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. அறவழி போராட்டத்துக்கு நன்றி.
கேள்வி:- மாணவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்:- கட்டுப்பாடு காத்து, சட்டத்தின் வழிநின்று, எந்தவித சட்டம்-ஒழுங்கு பிரச்னையிலும் ஈடுபடாமல் அறவழிப் போராட்டம் நடத்தியவர்களுக்கு நன்றி.
கேள்வி:- போராட்ட களத்தில் தமிழக அரசு மீது அதிக அளவில் விமர்சனம் செய்யப்பட்டதற்கு என்ன காரணம்?
பதில்:- பொது வாழ்க்கையில் இருந்தால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். விமர்சனங்களைத் தாங்கும் மனப்பக்குவம் வேண்டும் என்று அண்ணா பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com