கொட்டும் மழையிலும், கொளுத்திய வெயிலிலும் தொடர்ந்த போராட்டம்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரியிலும் போராட்டங்கள் சனிக்கிழமையும் தொடர்ந்தது. பல இடங்களில் மழையை பொருட்படுத்தாமலும், வெயிலை பொருட்படுத்தாமலும் போராட்டங்கள் உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரியிலும் போராட்டங்கள் சனிக்கிழமையும் தொடர்ந்தது. பல இடங்களில் மழையை பொருட்படுத்தாமலும், வெயிலை பொருட்படுத்தாமலும் போராட்டங்கள் உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றது. போராட்டத்தில் சிலம்பாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்குத் தேவையான குடை, பிளாஸ்டிக் தார்பாய்கள், உணவு, குளிர்பானங்கள், குடிநீர் போன்ற உதவிகளை தன்னார்வ அமைப்புகள் வழங்கி வருகின்றன.
புதுச்சேரியில்...: புதுச்சேரி ஏஎப்டி திடலில் 5-ஆவது நாளாக மாணவரகள் சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு வெள்ளிக்கிழமை இரவு கொட்டும் மழையிலும் நனைந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். '
சிவகங்கை மாவட்டத்தில்.....: சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு, 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு மகளிர் கல்லூரி மாணவியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காரைக்குடி: காரைக்குடியில் அழகப்பச் செட்டியார் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, அழகப்பா அரசு கலைக் கல்லூரி, அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி, அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில்...:ராமநாதபுரம் பட்டினம் காத்தான் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக சனிக்கிழமை 4ஆவது நாளாக போராட்டத்தை தொடர்ந்தது.
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக இளைஞர்கள் பாரம்பரியம் மீட்புக் குழு என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அறவழி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
முதுகுளத்தூர், கமுதி, கடலாடி பகுதிகளில் கொட்டும் மழையில் விடிய, விடிய போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டத்தில்...: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாணவர்கள் சனிக்கிழமை நான்காவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் திருநங்கைகள் நலச் சங்கத்தினர் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
பெங்களூரில் இருந்து காரைக்கால் செல்லும் ரயில் சேலம் பெரியார் மேம்பாலம் அருகே சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த ரயில் மூன்றாவது நாளாக சிறை பிடித்து வைக்கப்பட்டிருந்தது. போராட்டத்தில் பங்கேற்க வரும் மாணவர்கள், இளைஞர்கள் பலர், ரயில் என்ஜின் மீது ஏறிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கருப்பூர் பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவியர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரயில்வே கோட்ட அலுவலகம் பகுதியில் இருந்து பேரணியாகச் சென்றனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்று வரும் போராட்டத்தில் நடிகரும், திரைப்பட இயக்குநருமான சமுத்திரக்கனி பங்கேற்று,பேசினார்.
ஆட்சியர் நலம் விசாரிப்பு: சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் யோகேஷ்வரனை, மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும், அவரது பெற்றோருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
கூலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு: சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கூலமேட்டில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 22) காலை 9.45 மணிக்கு ஜல்லிக்கட்டை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைப்பார் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில்...: கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்பினர் கடந்த புதன்கிழமை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடர்ந்தது.
முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் கடலூரில் மழை பெய்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுமார் 3 மணி நேரம் மழையில் நனைந்தவாறு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
கடலூர், கடலூர் முதுநகர், நெய்வேலி, பண்ருட்டி, பெண்ணாடம் உள்ளிட்ட 12 இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்றது. கடலூர் முதுநகரில் நடைபெற்ற போராட்டத்தில் அசாம் மாநிலத்தவர், நேபாள நாட்டைச் சேர்ந்த இருவர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.
விழுப்புரம் மாவட்டத்தில்...:விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே நகராட்சித் திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தில் தொடர்ந்து 4-ஆவது நாளாக கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவு மழையின்போதும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர்கள் நள்ளிரவு கலைந்து சென்றனர். பிறகு, சனிக்கிழமை காலை மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். மாவட்டத்தில் 33 இடங்களில், 4 ஆயிரம் பேர் வரை சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டத்தில்...: திருச்சி மாநகரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் ஒன்று திரண்டு, நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன் கடந்த 4 நாள்களாக விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சனிக்கிழமையன்று சுமார் 50,000 பேர் கொட்டும் மழையிலும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
தஞ்சாவூரில் 5ஆவது நாளாக... : தஞ்சாவூர் ரயிலடியில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக சனிக்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் பலத்த மழையிலும் மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்தபோதும் கூட, மாணவர்கள், பொதுமக்கள் அதே இடத்திலேயே பதாகைகளை கூரையாக மாற்றிப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
மாவட்டத்தில் 23 இடங்களில் காத்திருப்புப் போராட்டமும், 4 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது.
புதுகையில்...: புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 4ஆவது நாளான சனிக்கிழமை அதிகாலையிலிருந்தே பெய்த சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
தருமபுரி மாவட்டத்தில்...: தருமபுரி அருகேயுள்ள நாய்க்கன்கொட்டாய், பழைய தருமபுரி, குமாரசாமிபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பலர் தங்களது காளைகளுடன் பேரணியாக வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதேபோல, பன்னாட்டு குளிர்பானங்களை புறக்கணிக்கும் நூதன போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டனர்.
தருமபுரி பச்சமுத்து கலை, அறிவியல் மகளிர் கல்லூரி மாணவியர் ஆயிரக்கணக்கானோர் தங்களது வகுப்புகளைப் புறக்கணித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை, பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்...:
கிருஷ்ணகிரி புறநகர்ப் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், பெண்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
பர்கூர், கந்திகுப்பம், போச்சம்பள்ளியை அடுத்த சந்தூர், காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒசூர் பேருந்து நிலையம் எதிரே 5-ஆவது நாளாக சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்கள்கலந்து கொண்டனர்.
காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, பாகலூர், பேரிகை, தளி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி உள்பட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டை ஆதரித்து போராட்டங்கள் நடைபெற்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில்...
திண்டுக்கல்லில் உள்ள பழனி சாலை, திருச்சி சாலை சந்திப்பில் 5 ஆவது நாளாக நீடித்த போராட்டத்தின் போது, பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், சேவல் சண்டையும் நடத்தப்பட்டன.

2 பேர் தற்கொலை முயற்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் அடுத்துள்ள பொன்னுமாந்தரைப் புதுப்பட்டியைச் சேர்ந்த ராஜவேல் (42). வழக்குரைஞர். இவர், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் 3 ஆவது மாடியில் நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, போலீஸார் மற்றும் வழக்குரைஞர்களின் வேண்டுகோளை ஏற்று தற்கொலை முடிவை அவர் கைவிட்டார்.
செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம்: திண்டுக்கல் அடுத்துள்ள தோட்டனூத்து பகுதியைச் சேர்ந்த இளம்வழுதி (40) என்பவர், திண்டுக்கல் ஒய்எம்ஆர்.பட்டி பகுதியில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி, தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com