பறிமுதலான ரூ. 1 கோடி பழைய நோட்டுகளை என்ன செய்வது?: ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் போலீஸார் ஆலோசனை

திருப்பூரில் பிடிபட்ட ஒரு கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, மீண்டும் போலீஸாரின் தொடர் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

திருப்பூரில் பிடிபட்ட ஒரு கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, மீண்டும் போலீஸாரின் தொடர் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மாநகரம், 15- வேலம்பாளையம் போலீஸ் எல்லைக்கு உள்பட்ட சோளிபாளையம் பகுதியில் சனிக்கிழமை மாலை போலீஸார் நடத்திய சோதனையின்போது, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான, புழக்கத்திலிருந்து நீக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் காரில் பிடிபட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக, புதுக்கோட்டையைச் சேர்ந்த சோடா உற்பத்தி நிறுவன உரிமையாளர் ராமசாமி (50), அவரிடம் வேலை செய்யும் செந்தில்குமார் (29), செந்தில்குமாரின் நண்பரான திருச்சியைச் சேர்ந்த சுலைமான் (31) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் புதுக்கோட்டையிலிருந்து திருப்பூர் வந்த கோவில் என்பவர் தலைமறைவானதாகத் தெரிகிறது.
இதுகுறித்து மாநகர காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
சில நாள்களுக்கு முன்பு ராமசாமி, தன்னிடம் வேலை செய்யும் செந்தில்குமாரை அழைத்துக்கொண்டு சென்னை சென்றுள்ளார். அங்கு, இப்ராஹிம் என்பவரிடம் ரூ. 10 லட்சத்தைக் கொடுத்து, அதற்குப் பதிலாக ஒரு கோடி ரூபாய் பழைய நோட்டுகளைப் பெற்றுள்ளார். பழைய நோட்டுகளை மாற்றும் தரகர்கள் குறித்து விசாரித்தபோது, சுலைமான் மூலமாக, தற்போது தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படும் கோவில் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர்கள் திருப்பூர் வந்தபோது, கோவில் தவிர மூவரும் பிடிபட்டனர்.
அவர்கள் திருப்பூர், ஜே.எம்.3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், நீதிமன்றத்தில் வைத்து பாதுகாப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், நீதிமன்றத்தில் ஒப்படைத்ததற்கான சான்று பெறப்பட்டு, போலீஸாரின் பாதுகாப்பிலேயே தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில தினங்களில் சம்பந்தப்பட்ட நீதிபதி முன்னிலையில் அந்தப் பணம் மீண்டும் சரிபார்க்கப்பட்டு ஒப்படைக்கப்படும். அதன் பிறகு ரிசர்வ் வங்கி வசம் பணம் ஒப்படைக்கப்படும்.
புழக்கத்திலிருந்து நீக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி வைத்திருப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய சட்டத் திருத்தத்தின்படி, எவ்வளவு பணம் பதுக்கப்பட்டுள்ளதோ, அதற்கு 5 மடங்கு அபராதமாகச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தவில்லை என்றால் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தெளிவான விளக்கம் இல்லை. எனவே, இவ்விவகாரத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடனும் சட்ட நிபுணர்களுடனும் ஆலோசித்து வருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com