நிகழாண்டில் 1,000 விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்ப்செட்கள்

நிகழாண்டில் ஆயிரம் விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்ப் செட்கள் 90 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
நிகழாண்டில் 1,000 விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்ப்செட்கள்

நிகழாண்டில் ஆயிரம் விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்ப் செட்கள் 90 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
சட்டப் பேரவையில் விதி 110- ன் கீழ் அவர் செவ்வாய்க்கிழமை படித்தளித்த அறிக்கை: தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க நிகழாண்டில் 22 மாவட்டங்களில் தக்காளி, கத்திரி, வெண்டை போன்ற காய்கறிப் பயிர்களில் வீரிய ஒட்டு ரகங்கள், உயர் விளைச்சல் ரக சாகுபடி 11 ஆயிரத்து 250 ஏக்கரில் மேற்கொள்ளப்படும்.
இதற்காக, வீரிய ஒட்டு ரக விதைகள், குழித்தட்டுகளில் வளர்க்கப்பட்ட காய்கறி நாற்றுகள் 50 சதவீத மானியத்தில் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வரை அளிக்கப்படும்.
ஆயிரம் பம்ப் செட்கள்: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 2 ஆயிரத்து 826 சூரியசக்தி பம்ப் செட்டுகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் தேவை அதிகம் இருப்பதால், நிகழாண்டில் இந்த வகை மோட்டார் பம்ப் செட்கள் 1,000 விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் 10 ஆண்டுகால செயல்திட்டமாக உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் நிறுவப்படும். நிகழாண்டில் இம்மையத்தின் தொடக்கப் பணிகள் ரூ.51 கோடியில் மேற்கொள்ளப்படும்.
தோட்டக்கலை விளை பொருள்களைச் சேகரித்து, தரம் பிரித்து, பொட்டலம் கட்டி விநியோகத் தொடர் மேலாண்மையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நிகழாண்டில் பண்ணை அளவில் 597 பொட்டலம் கட்டும் அறைகள் அமைக்கப்படும்.
தமிழகத்தில் கிராம அளவில் இயங்கி வரும் 550 துணை வேளாண் விரிவாக்க மையங்களில் பல கட்டடங்கள் பழுதடைந்துள்ளன. இதனைச் சரி செய்யும் வகையில், நிகழாண்டில் 160 துணை வேளாண் விரிவாக்க மையங்கள் புனரமைக்கப்படும்.
ரூ.108 கோடியில் புதிய வசதிகள்: கோவை, தூத்துக்குடியில் உள்ள கிள்ளிகுளம் வேளாண் கல்லூரிகள், பெரியகுளம் தோட்டக் கல்லூரி, மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி, வம்பன் பயறு ஆராய்ச்சி நிலையம், கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம், உதகை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகளும், விதை மையம் உள்ளிட்டவையும் ரூ.108 கோடியில் ஏற்படுத்தப்படும்.
நிகழாண்டில் 430 வேளாண் உதவி அலுவலர் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலமாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com