புதுவை சட்டப்பேரவை செயலர் மீது பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் புகார்

காங்கிரஸ் கட்சிக்காரர் போல் சட்டப்பேரவை செயலாளர் செயல்படுவதாக பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் புகார் கூறியுள்ளனர். 

காங்கிரஸ் கட்சிக்காரர் போல் சட்டப்பேரவை செயலாளர் செயல்படுவதாக பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் புகார் கூறியுள்ளனர். 

பாஜகவைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி உள்ளிட்ட 3 பேரை ஆளுநர் கிரண்பேடியின் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை புதுவை சட்டப்பேரவைக்கு நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்தது. முறையான அறிவிப்பு இல்லாததால் பேரவைத் தலைவர் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்யவில்லை. இதனால் ஆளுநர் மாளிகையில் கிரண்பேடியே மூவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே 3 பேரும் தங்களுக்கு கட்சி அலுவலகம், பேரவையில் இருக்கை வசதி, இதர சலுகைகளை வழங்க வேண்டும் எனக் கோரி ஏற்கெனவே பேரவை செயலாளர் வின்சென்ட் ராயரிடம் மனு அளித்திருந்தனர். அது இன்னும் பரிசீலனையிலேயே உள்ளது.

இதற்கிடையே அதே பெயர் கொண்ட 3 பேர் தாங்கள் தான் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் எனவும், தங்களுக்கு பேரவையில் இருக்கை வசதி, சலுகைகளை தர வேண்டும் என பேரவைச் செயலரிடம் மனு அளித்திருந்தனர். இதற்கிடையே பாஜகவின் நியமன எம்.எல்.ஏக்களான சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் வெள்ளிக்கிழமை பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர் அறைக்கு திடீரென சென்றனர். அவரிடம் எவ்வாறு நீங்கள் அடையாளம் தெரியாத நபர்களிடம் கடிதத்தை பெறலாம். சட்டப்பேரவை என்ன தபால் நிலையமா. யார் மனு தந்தாலும் வாங்குவீர்களா. எங்களை நியமித்தது தொடர்பாக அரசிதழில் வெளியான நகலையும் அளித்துள்ளோம். அதையும் மீறி நீங்கள் எவ்வாறு அவர்களிடம் கடிதம் பெறலாம். அவர்கள் போலி நபர்கள் என தெரிந்த பின்னர் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. நீங்கள், அதிகாரி போல் நடக்க வேண்டும். காங்கிரஸ்காரர் போல் நடக்கக் கூடாது என குற்றம் சாட்டினர். இதற்கு பதிலளித்த பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர் பேரவை அலுவலகத்தில் எவர் வேண்டுமானாலும் கடிதம், மனுவைத் தரலாம். அதன் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுப்போம். அதுபோன்று தான் அந்த கடிதங்களும் பெறப்பட்டன. இப்போது தான் நீங்கள் இப்பிரச்னை குறித்து தெரிவித்துள்ளளீர்கள் என்றார். 

தொடர்ந்து பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் 3 பேரும் தங்களுக்கு சட்டப்பேரவை வளாகத்தில் கட்சிக்கு அலுவலகம், சலுகைகள், வழங்க வேண்டும் என வலியுறுத்தி மீண்டும் கோரிக்கை மனு அளித்தனர். 

பின்னர் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் கூறியதாவது:
மாநில காங்கிரஸ் அரசு துணைநிலை ஆளுநருடன் மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறது. இதனால் வளர்ச்சித் திட்டங்கள் தடைபட்டு வருகின்றன. மத்திய பாஜக அரசு புதுவை மாநில வளர்ச்சிக்கு எப்போதும் உதவத் தயாராக உள்ளது. மேலும் பேரவைச் செயலரிடம் கடிதம் தந்த 3 போலி நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். பேரவையில் எங்களுக்கு அலுவலகம், இருக்கை, இதர சலுகைகளை வழங்க மீண்டும் மனு அளித்தோம். பேரவைத் தலைவர் அவற்றை நிறைவேற்றுவார் என நம்பிக்கை உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com