கொடுங்கையூர் தீ விபத்தில் பற்றி எரிந்த விடியோ மோகம்? 

கொடுங்கையூரில் நிகழ்ந்த பேக்கரி தீ விபத்தில், ஏராளமான பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், ஏராளமானோர் விடியோ எடுத்ததாலும் தான் உயிரிழப்பும், பலருக்கும் தீக்காயம் ஏற்படக் காரணம் எ
கொடுங்கையூர் தீ விபத்தில் பற்றி எரிந்த விடியோ மோகம்? 


சென்னை: கொடுங்கையூரில் நிகழ்ந்த பேக்கரி தீ விபத்தில், ஏராளமான பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், ஏராளமானோர் விடியோ எடுத்ததாலும் தான் உயிரிழப்பும், பலருக்கும் தீக்காயம் ஏற்படக் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கொடுங்கையூரில் உள்ள ஒரு பேக்கரியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர் வெடித்ததில் தீயணைப்புத்துறை வீரர் ஏகராஜ் (50) உயிரிழந்தார். மேலும் போலீஸார், பொதுமக்கள், ஊர்க் காவல் படையினர் உள்பட 48 பேர் காயமடைந்தனர்.

சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் ஓம் முருகா ஹாட்சிப்ஸ் என்ற பெயரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு புதிய பேக்கரி கடை ஒன்று திறக்கப்பட்டது. ஆனந்தன் என்பவர் இந்த கடையை நடத்தி வந்தார்.

கடந்த சனிக்கிழமை (ஜூலை 15) இரவு 10 மணிக்கு ஆனந்தன் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றார். அதையடுத்து இரவு 11.15 மணியளவில் பேக்கரி கடையிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் கடை தீப்பிடிக்கத் தொடங்கியது.

இதைப் பார்த்த அந்தப் பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக கொடுங்கையூர் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

பேக்கரியின் வெளிப் பகுதியில் பிடித்திருந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஏகராஜ், பூபாலன், லட்சுமணன், ராஜதுரை, ஜெயபாலன் ஆகிய 5 பேரும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் பரவியதும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வேடிக்கை பார்க்க அங்கு திரண்டனர். தீ கொழுந்துவிட்டு எரிவதை பொது மக்கள் பலர் தங்கள் செல்லிடப்பேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

பேக்கரியின் அக்கம் பக்கத்தில் வசித்த வந்தவர்கள், ஷட்டரை திறந்து உடனடியாக தீயை அணைக்கும்படியும், இல்லையென்றால் அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ பரவும் என்று அழுத்தம் கொடுத்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

பேக்கரியின் முன்பகுதியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து விட்டு தீயணைப்பு வீரர்கள் கடையின் ஷட்டரை திறந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் கடையில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் தீயணைப்பு வீரர்கள் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சிலிண்டர் வெடித்ததில் நாலாபுறமும் தீப்பிழம்புகள் பறந்து சென்றன. இதில் செல்லிடப்பேசியில் படம் பிடித்தபடியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் சிக்கினர்.

திடீரென சிலிண்டர் வெடித்ததால் அந்தப் பகுதியில் திரண்டிருந்த பொதுமக்களுக்கு என்ன நடந்தது என்பதை உணருவதற்குள் கடையிலிருந்து வெளியேறிய தீப்பிழம்பில் சிக்கி காயமடைந்து கீழே விழுந்தனர்.

சிலர் உடலில் ஏற்பட்ட தீக்காயங்கள் ஏற்படுத்திய வலியைத் தாங்க முடியாமல் கதறினர். இதன் காரணமாக தீ விபத்து நடந்த இடத்தில் பெரும் பதற்றம் நிலவியது. தகவல் அறிந்ததும் காவல் துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் விபத்து நடந்த இடத்துக்கு வரவழைக்கப்பட்டன.

உயிரிழந்த தீயணைப்பு வீரர்: தீ விபத்தில் முதலில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தீயணைப்பு வீரர்கள் ஏகராஜ், பூபாலன், லட்சுமணன், ஜெயபாலன், ராஜதுரை ஆகியோர் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் விருதுநகர் மாவட்டம் கடங்கம் கிராமத்தைச் சேர்ந்த ஏகராஜ் (50) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு உயிரிழந்தார். இந்தத் தீ விபத்தில் தீயணைப்பு துறையைச் சேர்ந்த 3 வீரர்கள், 4 காவலர்கள், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவர், பொதுமக்கள் 40 பேர் என மொத்தம் 48 பேர் காயமடைந்தனர்.

இவர்களில் 32 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 11 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதேபோன்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒருவரும், தனியார் மருத்துவமனையில் ஒருவரும் சேர்க்கப்பட்டனர். உதவி ஆய்வாளர்கள் அரிஹரபுத்திரன், விமலேசன் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்த சம்பவத்தில், தீ கொழுந்துவிட்டு எரிந்தபோது தீப்பிடித்த பகுதிக்கு அருகே நின்று கொண்டு ஏராளமானோர் விடியோ எடுத்துள்ளனர். அவர்களை வெளியேற்ற தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் பல நடவடிக்கை எடுத்தும் அவர்கள் அகலவில்லை.

இதனால், ஷட்டரை திறந்த போது, ஏற்பட்ட தீப்பிழம்பில் இருந்து தப்பிக்க தீயணைப்புத் துறையினர் வேகமாக ஓடவும் முடியாமல் பொதுமக்கள் கூடியிருந்தனர். இதனால்தான் தீயணைப்புத் துறையினருக்கு அதிக காயம் ஏற்பட்டதாகவும், பொதுமக்களும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டதாகவும் காயமடைந்தவர்களில் ஒருவர் கூறினார்.

கடைக்கு முன்பு சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடிவிட்டனர். கடையை திறந்ததும், அதனுள் இருந்து தீப்பிழம்புகள் அதிகவேகத்தில் வெளியேறியது. ஆனால், அதிகக் கூட்டம் காரணமாக எங்களால் நகரக் கூட முடியவில்லை. அதிகக் காயமடைந்திருந்ததால் நகர்ந்தபடியே கூட்டத்தில் இருந்து வெளியேறி மருத்துவமனையை அடைந்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் ஏகராஜுக்கு, சென்னையில் வழங்கப்பட்ட பணிக்காலம் இன்னும் 3 நாட்களில் முடிவடைந்து, சொந்த ஊரான விருதுநகர் திரும்ப இருந்த நிலையில், கொடுங்கையூர் தீ விபத்தில் பலியான தகவல் தெரிய வந்துள்ளது. 

ஏகராஜின் குடும்பத்துக்கு ரூ. 13 லட்சம் நிதி, அரசு வேலை
தீ விபத்தில் உயிரிழந்த ஏகராஜ் குடும்பத்துக்கு ரூ. 13 லட்சம் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

உயிரிழந்த ஏகராஜின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சமும், கருணைத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்கவும், சிறப்பு நிகழ்வாக அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு விபத்தோ, தீ விபத்தோ நேரிடும் போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து உதவுவார்கள். பல கொடூர விபத்துகளின் போது பொதுமக்களின் துரித உதவியால் ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதாக செய்திகளிலும் படித்திருப்போம். ஆனால், செல்போன் விடியோ மோகத்தால் இன்று, விபத்து நடந்தால் ஓடோடிச் செல்லும் மக்கள் தவிக்கும் உயிர்களை காப்பாற்றுவதை விட்டுவிட்டு விடியோ எடுத்து பல லைக்குகளை அள்ளவே துடிக்கிறார்கள். 

இந்த விடியோ மோகம்தான் இன்று அவர்களையும் விபத்தில் சிக்க வைத்திருக்கிறது என்பதே உண்மை. என்று தணியப்போகிறது இந்த விடியோ மோகம்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com