கடவுச்சீட்டுக்கு இனி நான்கு கட்டங்களாக விசாரணை: போலிகளை தடுக்க சென்னை காவல்துறை நடவடிக்கை

போலி கடவுச்சீட்டுகளை (பாஸ்போர்ட்) தடுப்பதற்காக சென்னையில் கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களிடம் இனி 4 கட்டங்களாக விசாரணை செய்வதற்கு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
கடவுச்சீட்டுக்கு இனி நான்கு கட்டங்களாக விசாரணை: போலிகளை தடுக்க சென்னை காவல்துறை நடவடிக்கை

போலி கடவுச்சீட்டுகளை (பாஸ்போர்ட்) தடுப்பதற்காக சென்னையில் கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களிடம் இனி 4 கட்டங்களாக விசாரணை செய்வதற்கு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு பெறுவதைத் தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், போலி ஆவணம் மூலம் கடவுச்சீட்டு பெறுவதற்கு சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதி நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர் முருகன் உதவி செய்து வந்திருப்பது காவல்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புதிதாக கடவுச்சீட்டு பெறுவதற்கு ஒருவர் விண்ணப்பிக்கும்போது, சம்பந்தப்பட்ட நபர் மீது குற்ற வழக்குகள் இருக்கிறதா, அவர் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள முகவரியில்தான் வசிக்கிறாரா, அவர் விண்ணப்பத்துடன் இணைத்துள்ள சான்றிதழ்கள், ஆவணங்கள் சரியானவைதானா என்பன போன்ற விவரங்களை சரிபார்க்க அப்பகுதி காவல் துறைக்கு அனுப்பப்படும். இந்த விவரங்களை விசாரித்து அவர் குற்றற்றவர் என காவல்துறையினர் அறிக்கை அளிப்பார்கள்.
சென்னை பெருநகர காவல்துறையில் கடவுச்சீட்டு விசாரணைக்கு என்று நுண்ணறிவு பிரிவின் கீழ் தனிப்பிரிவு இயக்குகிறது. இங்கு ஒரு ஆய்வாளர் தலைமையிலான போலீஸார், கடவுச்சீட்டு விசாரணைக்கு வரும் விண்ணப்பங்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
அதேவேளையில், ஒவ்வொரு காவல் நிலையத்துக்கு என நியமிக்கப்பட்டிருக்கும் நுண்ணறிவு பிரிவு காவலர்கள், கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களிடம் விசாரணை மேற்கொண்டு, சான்று அளிக்கின்றனர். அந்த காவலர் அளிக்கும் சான்றின் படியே கடவுச்சீட்டை, இந்திய வெளியுறவுத்துறையின் கீழ் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்கள் வழங்கும்.
தமிழகத்தில் சென்னைப் பெருநகர காவல்துறைதான் அதிகளவில் கடவுச்சீட்டு விசாரணையை செய்கிறது. ஒரு ஆண்டுக்கு 2 லட்சத்தில் இருந்து 2.50 லட்சம் வரை கடவுச்சீட்டு விசாரணையை முடித்து அனுப்புகிறது. அதேவேளையில் நாட்டிலேயே கடவுச்சீட்டு விசாரணையை மிகவும் விரைவாகவும், நம்பகத்தன்மையோடும் சென்னை காவல்துறையே செய்கிறது.
இதில், ஒரு கடவுச்சீட்டு விசாரணையை 21 நாள்களுக்குள் செய்து சான்று அளிப்பதற்கு மத்திய வெளியுறவுத்துறை, சென்னை காவல்துறைக்கு ரூ.150 கட்டணமாக வழங்குகிறது.
அதேநேரத்தில் கடவுச்சீட்டு விசாரணையை செய்து முடிப்பதற்கு 21 நாள்களுக்கு மேலாகிவிட்டால், கட்டணம் ரூ. 50 ஆக குறைக்கப்படும். கடவுச்சீட்டு விசாரணையின் மூலம் சென்னை காவல்துறைக்கு ஆண்டுதோறும் நல்ல வருவாய் கிடைக்கிறது.
இந்த நிலையில், கடவுச்சீட்டு விசாரணை செய்யும் காவலரே மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளதால், கடவுச்சீட்டு விசாரணையை சென்னை காவல்துறை கடுமையாக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, கடவுச்சீட்டு விசாரணையை ஒவ்வொரு காவல் நிலையத்தின் நுண்ணறிவு காவலர் செய்வதோடு மட்டுமன்றி, நுண்ணறிவுப் பிரிவின் அந்த சரக உதவி ஆய்வாளர், காவல் மாவட்ட நுண்ணறிவு ஆய்வாளர், நுண்ணறிவு பிரிவின் மண்டல உதவி ஆணையர் ஆகியோரும் ஆவணங்களை சரி பார்க்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் உத்தரவிட்டுள்ளார்.
அதாவது இனி கடவுச்சீட்டு விண்ணப்பிப்போர் குறித்து 4 கட்ட விசாரணை நடத்தப்படும். இதில் பணிச்சுமையின் காரணமாக உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆணையர்கள் ஆகியோர் அனைத்து கடவுச்சீட்டு விண்ணப்பத்தாரர்களிடம் விசாரணை நடத்த முடியாது என்பதால், 100 கடவுச்சீட்டு விசாரணைக்கு வந்தால் அதில் ரேண்டமாக 20 விண்ணப்பங்களை உதவி ஆய்வாளரும், 10 விண்ணப்பங்களை ஆய்வாளரும், 5 விண்ணப்பங்களை உதவி ஆணையரும் செய்ய வேண்டும் எனவும் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல நுண்ணறிவு பிரிவு காவலர்கள், ஒவ்வொரு விண்ணப்பதாரின் முகவரிக்கும் சென்று விசாரணை செய்து, அனைத்து ஆவணங்களையும், சான்றிதழ்களின் அசலையும் பார்த்து ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
நுண்ணறிவுப் பிரிவு காவலர்கள், கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை செய்யாமலும், அசல் சான்றிதழை பார்க்காமலும் சான்று அளித்தால்,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இத்தகைய நடவடிக்கையின் மூலம், போலி கடவுச்சீட்டு தயாரிக்கப்படுவது முற்றிலும் தடுக்கப்படுவதோடு, தகுதியானவர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. மேலும் காவலர்கள் கவனக்குறைவோடும், மோசடிக்கு துணைபோகும் வகையிலும் செயல்பட்டால் உடனே கண்டறிந்துவிட முடியும் என சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.


பணிச்சுமையை குறையுங்கள்

ண்ணறிவு பிரிவு பணியை மேம்படுத்த அவர்களது பணிச்சுமையை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை பெருநகர காவல்துறையின் முதுகெலும்பாக நுண்ணறிவு செயல்படுகிறது. நுண்ணறிவு காவலர்கள், அந்தந்த பகுதியில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னைகள், அரசியல், மத,சாதி ரீதியான பிரச்னைகள், பொதுமக்கள் பிரச்னைகள் ஆகியவற்றை கண்காணிப்பதோடு, கடவுச்சீட்டு விசாரணை, பணி நியமனம் தொடர்பான விசாரணை போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்களது பணிச்சுமை கடந்த காலத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளதால், கவனக்குறைவாக செயல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதன் விளைவாகவே கடவுச்சீட்டு விசாரணை, புதிய பணி நியமனம் தொடர்பான விசாரணை போன்றவற்றில் அதிக கவனம் அவர்களால் செலுத்த முடிவதில்லை. மேலும் ஒரு மாதத்துக்கு ஒரு காவலருக்கு சுமார் 200 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் விசாரணைக்கு வருவதால், அவர்கள் நேரில் விசாரணை செய்ய முடியாமல், விண்ணப்பதாரரை ஏதாவது ஒரு இடத்துக்கு வரவழைத்து, கையொப்பம் பெற்று அனுப்பிடுவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
எனவே கடவுச்சீட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் காவல்துறை உயர் அதிகாரிகள், நுண்ணறிவு பிரிவு காவலர்களின் பணிச்சுமையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே போலீஸாரின் கோரிக்கையாக உள்ளது.

110 நுண்ணறிவு பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம்

ன்னை காவல்துறையில் 110 நுண்ணறிவு காவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேவேளையில் 10 காவலர்கள் காத்திப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த விவரம்: போலி ஆவணங்கள் கொடுத்து கடவுச்சீட்டு பெற்ற விவகாரம் கடந்த ஒரு வாரகாலமாக பூதாகரமாக வெடித்தாலும், கடந்த இரு மாதங்களாக சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், துறை ரீதியாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விவகாரத்தில், ஒரு காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் காவலர்கள்தான் இப்படிப்பட்ட மோசடியில் ஈடுபடுவது து தெரியவந்தது. மேலும் அவர்கள், தங்களது பணியை தாண்டி பல்வேறு விஷயங்களில் தலையீடுவதும் தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள், நுண்ணறிவு பிரிவில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் காவலர்கள் பட்டியலை தயார் செய்தனர். இதில் நுண்ணறிவு பிரிவில் பணி செய்யும் மொத்தம் உள்ள சுமார் 400 காவலர்களில், 110 காவலர்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிவது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை, நுண்ணறிவு பிரிவுக்குள்ளே பணியிட மாற்றம் செய்தனர். அதேவேளையில் கடவுச்சீட்டு விசாரணையை முறையாக செய்யாமலும், பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாலும் 10 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com