அதிகரிக்கும் பேருந்து விபத்துகள்: ராமதாஸ் கண்டனம்

அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடந்த இரு வாரங்களில் தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் எதிர்கொண்ட 8 விபத்துகளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர், 78 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்தச் சாலை விபத்துகள் ஜூன் மாத இறுதியிலிருந்து ஜூலை 15-ஆம் தேதி வரையிலான இரு வாரங்களில் நடந்தவை. போக்குவரத்துக் கழகங்களின் அலட்சியம்தான் இதற்குக் காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
2016-17-ஆம் ஆண்டில் அரசுப் பேருந்துகள் 1,209 விபத்துகளைச் சந்தித்துள்ளன. இவற்றில் 1,373 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டில் அரசுப் பேருந்துகள் எதிர்கொண்ட விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதுவரை 20 சதவீதம் அதிகரித்துள்ளன. அரசுப் பேருந்துகள் எதிர்கொள்ளும் பெரும்பாலான விபத்துகளுக்கு பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படாதது, ஓட்டுநர்கள் ஓய்வின்றி தொடர்ச்சியாகப் பேருந்துகளை இயக்க கட்டாயப்படுத்தப்படுவதுதான் காரணம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஓட்டுநர்களுக்கு போதிய ஓய்வும், நல்ல மனநிலையும் அவசியம். ஆனால், இரவு நேரங்களில் ஓட்டுநர்கள் ஓய்வெடுப்பதற்காகவும், உறங்குவதற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் அதற்குத் தகுதியற்றவை. இதனால், ஓய்வெடுக்க முடியாமல் அடுத்து பேருந்து ஓட்டும்போது ஓட்டுநர்கள் உறங்கி விபத்துகள் ஏற்படுகின்றன.
மற்றொருபுறம் பேருந்துகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இயக்கப்படும் 22,500 பேருந்துகளில் 7 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே இயக்கத் தகுதியானவை. மீதமுள்ள பேருந்துகள் அனைத்தும் 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோமீட்டருக்கு மேல் ஓடி காலாவதியானவை.
இதனால் அரசுப் பேருந்துகளில் ஏறினால் எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என்ற கவலையுடனேயே பயணம் செய்ய வேண்டி உள்ளது. இந்த நிலையை மாற்ற அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காணப்படும் ஊழலை ஒழித்து, பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com