திருநள்ளாறு கோயில் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருநள்ளாறு கோயில் நுழைவு வாயில் முதல் ராஜகோபுரம் வரையிலான ஆக்கிரமிப்புகளை போலீஸார் திங்கள்கிழமை அகற்றினர்.
திருநள்ளாறு கோயில் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போலீஸார்.
திருநள்ளாறு கோயில் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போலீஸார்.

திருநள்ளாறு கோயில் நுழைவு வாயில் முதல் ராஜகோபுரம் வரையிலான ஆக்கிரமிப்புகளை போலீஸார் திங்கள்கிழமை அகற்றினர்.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவானை தரிசிக்க வருவோர், வெயில் மற்றும் மழையில் பாதிக்காதவாறு நுழைவு வாயில் முதல் ராஜகோபுரம் வரையிலான சுமார் 150 மீட்டர் நீளத்தில் காற்றோட்டத்துடன் கூடிய நிரந்தர மேற்கூரை கோயில் நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ளது.
நிரந்தர மேற்கூரை போடப்பட்ட பின்னர், கோயிலுக்கு வருவோரை கண்காணிக்கும் வகையில் இந்த பகுதியில் ஆங்காங்கே கண்காணிப்புக் கேமராவை கோயில் நிர்வாகம் பொருத்தியுள்ளது. இதை வசதியாக பயன்படுத்திக்கொள்ளும் உள்ளூர் பிரமுகர்கள் வெளியூர் செல்ல வேண்டுமெனில், சன்னிதியில் வாகனத்தை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இது பல நாள்களாக அங்கேயே நிற்கும் நிலை உள்ளது.
மேலும், கோயில் பூஜைக்கான பொருள்கள் விற்கும் சிறிய கடைகள் சன்னிதி சாலையை இருபுறமும் ஆக்கிரமித்துள்ளன.
இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கடைகள் சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், பக்தர்கள் கோயிலுக்குச் சென்று திரும்புவதில் சிரமம் ஏற்பட்டு வருவதாக புகார் கூறப்பட்டது. இந்த பிரச்னையில் கோயில் நிர்வாகம், காவல்துறை நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.
இந்நிலையில், வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் மாரிமுத்து உத்தரவின் பேரில், திருநள்ளாறு காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீஸார், திருநள்ளாறு கோயிலுக்கு திங்கள்கிழமை சென்றனர்.
திருநள்ளாறு கோயில் நுழைவு வாயில் முதல் ராஜகோபுரம் வரை சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பூஜை பொருள்கள் விற்பனை மையங்களின் பொருள்களை அப்புறப்படுத்தினர். மேலும், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் வெளியேற்ற உத்தரவிட்டனர்.
இதுகுறித்து வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் மாரிமுத்து கூறியது:
திருநள்ளாறு கோயில் பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், பக்தர்கள் எளிதாக கோயிலுக்குச் சென்று திரும்ப முடியவில்லை என்ற புகார் கூறப்பட்டதன்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பூஜை பொருள்கள் விற்பனை உள்ளிட்ட எந்தவொரு விற்பனையகமும் கோயில் சன்னிதிக்குச் செல்லும் சாலையில் நடத்தக்கூடாது. அவரவர்களுக்குச் சொந்தமான இடத்தில் வைத்துத்தான் நடத்த வேண்டும். அதுபோல, பிரதான சாலைகளில் வாகன நிறுத்தம் என கோடு போடுவது போன்று சன்னிதி பகுதியிலும் போடப்படவுள்ளது. இந்த பகுதியில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். குறிப்பாக சனிக்கிழமை வாகனங்கள் நிறுத்த அனுமதி கிடையாது.
இந்த செயல்பாடுகளுக்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு தர கோரப்பட்டுள்ளது. தொடர்ந்து திருநள்ளாறு கோயில் சன்னிதி பகுதியை காவல்துறையினர் கண்காணித்து வருவர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com