புதிய தொழில் கொள்கை உருவாக்க வேண்டும்: சிஐஐ

தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய தொழில் கொள்கை உருவாக்க வேண்டும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் ஷோபனா காமினி தெரிவித்தார்.

தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய தொழில் கொள்கை உருவாக்க வேண்டும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் ஷோபனா காமினி தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ)-இன் 2017-18-ஆம் ஆண்டுக்கான செயல் திட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அவர் கூறியது:
இந்திய தொழில் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. டிஜிட்டல் முறை கொண்டு வந்த பின், இணைதள வர்த்தகம் அதிகரித்துள்ளது. இதுதவிர, ஸ்டார்ட் ஆப் வளர்ந்து வருகிறது. இதன்காரணமாக, ஒட்டுமொத்தமாக தொழில் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும். 1991-ஆம் ஆண்டு தொழில் கொள்கை கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு, எந்த மாற்றமும் செய்யவில்லை. எனவே, புதிய தொழில் கொள்கை அவசியமாகிறது.
நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்குவது முக்கியமான கொள்கையாக உள்ளது.
பல்வேறு துறைகளில் புதிய தொழில்நுட்பத்துடன் தரமான வேலை வாய்ப்பை உருவாக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பம் வளர வளர புதிய வகையான வேலை வாய்ப்புகள் உருவாகும். பெண்களை தொழில் துறையில் சேர்க்க வேண்டும். உற்பத்தி துறை மட்டுமின்றி எல்லா துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை கொண்டு வர வேண்டும். இதன்மூலம், மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
பணவீக்கம் குறைந்துள்ளநிலையில், கடனுக்கான வட்டிவிகிதம் அதிகமாக இருக்கிறது. இதனால், புதிய முதலீடுகளை ஈர்ப்பது கடினமாக உள்ளது. வட்டி விகிதம் குறைந்தால், பொருள்கள் நுகர்வு அதிகரிக்கும். தேவை அதிகரித்து, உற்பத்தி உயர வாய்ப்பு இருக்கிறது.
சரக்கு மற்றும் சேவை வரி வரவேற்கக்கூடியது. அதேநேரத்தில், சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. அதை சரி செய்ய அந்தந்த அமைச்சகத்துடன் கலந்துபேசி தீர்வு காணப்படும். சிறு, நடுத்தர தொழில் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பம் ஏற்படுத்தல், புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை அடையாளம் காண்பது, கிளஸ்டர் முறையில் தொழிலை பெருக்க புது உத்திகள் கையாள்தல் ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி சட்டம், திவால் சட்டம், அன்னிய நேரடி முதலீடு ஈர்ப்பதில் தாராளமயம், தொழில் செய்வதற்கான நடைமுறை எளிமைப்படுத்தல் உள்பட பல சீர்திருத்தங்கள் நிகழாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என்றார் ஷோபனா காமினி. நிகழ்ச்சியில், சி.ஐ.ஐ. தென் மண்டலத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர், சி.ஐ.ஐ. இயக்குநர் சந்திரஜித் பானர்ஜி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com